
இந்தியாவின் சந்திரயான் சாதனையை கவுரவிக்கும் வகையில், கூகுள் தளம் தனது தேடுபொறியில் அனிமேஷன் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி சர்வதேசளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பல்வேறு மூலைகளில் இருந்தும், நிலவு மட்டுமன்றி இந்தியா மற்றும் இஸ்ரோ குறித்தும் கூகுளில் தேடுவோர் அதிகரித்துள்ளனர்.
ஜூலை 14 அன்று ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் பயணத்தின் நிறைவாக, ஆக.23 அன்று அதன் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் பரப்பில் தரையிறங்கியது. இதன் மூலமாக அமெரிக்கா, சீனா, முன்னாள் சோவியத் ரஷ்யா வரிசையில் நான்காவது தேசமாக இந்தியா சாதனை படைத்துள்ளது. மேலும், நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் தடம் பதிக்காத நிலையில், அதனையும் இந்தியா சாதித்துள்ளது.
மேலும் நிலவின் தென் துருவம் பனி சூழ்ந்திருப்பதை சந்திரயான் உறுதி செய்துள்ளது. நிலவின் தென் துருவம் பனிமயமாய் இருப்பது அறிவியலாளர்கள் மத்தியில் வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. ஐஸ் நிறைந்திருப்பது என்பது, அங்கே நீர் மற்றும் காற்று இருப்பதையும் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் ராக்கெட்டுக்கு எரிபொருளான ஹைட்ரஜன் அங்கே இருக்கவும் வாய்ப்புள்ளதாக அறிவியலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்த மகிழ்வின் வெளிப்பாடாக, சந்திரயான் வெற்றிக்கு பலரும் வாழ்த்துக்களைப் பகிர்ந்து வர, அவர்களில் கூகுள் தேடு பொறியும் இணைந்திருக்கிறது. சந்திரயான்-3 வெற்றியை கொண்டாடும் வகையில் சிறப்பு அனிமேஷன் டூடுலை வெளியிட்டு, கூகுள் தேடுபொறி இந்தியாவை பெருமைப்படுத்தி உள்ளது.
தேடுபொறி லோகோவில் சந்திரன் போன்ற டூடுலை உருவாக்கி, அதனை லேண்டர் சுற்றி வந்து ரோவரை தரையிறக்குவதுபோல வடிவமைத்துள்ளது. இந்த அனிமேஷன் டூடுல் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.