கூகுள் டூடுலில் கொண்டாடப்படும் அண்ணா மணி: யார் இவர்?

கூகுள் டூடுலில் கொண்டாடப்படும் அண்ணா மணி: யார் இவர்?

‘இந்தியாவின் வானிலைப் பெண்' என அழைக்கப்படும் அண்ணா மணியின் 104-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது கூகுள். வானிலை ஆய்வுத் துறையில் அவரது சாதனைகளை கெளரவிக்கும் வகையில் வகையில் அவரது உருவம் பொறிக்கப்பட்ட கூகுள் டூடுல், கூகுளின் முகப்புப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

1918 ஆகஸ்ட் 23-ல் திருவிதாங்கூரில் உள்ள பெருமேட்டில் ஒரு சிரியன் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர் அண்ணா மணி. 8 குழந்தைகளில் ஏழாவதாகப் பிறந்த அண்ணா மணி, இளம் வயதில் நடனத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். கூடவே காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு எளிய வாழ்க்கை முறையைப் பின்பற்றத் தொடங்கினார். பெண்களுக்குக் கல்வி வாய்ப்புகள் அரிது எனும் நிலைமை இருந்தபோதும், கல்வியிலும் புத்தக வாசிப்பிலும் ஆர்வம் காட்டினார். அதன் மூலம் அவரது கல்விக்கு அவரது குடும்பம் துணை நின்றது.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இயற்பியல் மற்றும் வேதியியல் பயின்றார். பின்னர், புகழ்பெற்ற விஞ்ஞானியான சர் சி.வி.ராமனின் மேற்பார்வையில் இந்திய அறிவியல் கழகத்தில் வைரம், ரூபி போன்றவற்றின் ஒளியியல் பண்புகள் குறித்த ஆராய்ச்சியைத் தொடங்கினார். 5 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார். 1945 லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் இயற்பியலில் உயர் கல்வி பயின்றார்.

1948-ல் இந்தியா திரும்பியதும் புணே நகரில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் துணைப் பொது இயக்குநராகப் பதவிவகித்தவர். அது மட்டுமல்ல, ஐநா-வின் உலக வானிலையியல் அமைப்பிலும் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்திருக்கிறார். வானிலைக் கருவிகள் மேம்பாட்டில் முக்கியப் பங்காற்றியது அவரது முக்கியச் சாதனையாகக் கருதப்படுகிறது. 1987-ல் அறிவியல் துறையில் அவரது பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இன்ஸா கே.ஆர்.ராமநாதன் பதக்கம் வழங்கப்பட்டது.

2001 ஆகஸ்ட் 16-ல் திருவனந்தபுரத்தில் காலமானார். 2018-ல் அவரது நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், அவரைப் பற்றிய குறிப்புகளையும் அவரது நேர்காணலையும் வெளியிட்டு கெளரவித்தது உலக வானிலையியல் அமைப்பு .

ஆராய்ச்சிப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அண்ணா மணி, திருமணமே செய்துகொள்ளவில்லை.

சி.வி.ராமனின் மாணவர்களில் மூவர் மட்டுமே பெண்கள். அவர்களில் அண்ணா மணி முக்கியமானவர். அதேசமயம், இறுதிவரை அவரால் முனைவர் பட்டம் பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in