வனவிலங்குகள், இயற்கை வளம் பாதிக்கும்: கொடைக்கானல்- பழனி ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்படுமா?

வனவிலங்குகள், இயற்கை வளம் பாதிக்கும்: கொடைக்கானல்- பழனி ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்படுமா?

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது இளவரசி தான் என மெய்ப்பிக்கும் வகையில் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதியாகவும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான தட்பவெப்பநிலை நீடிப்பதும் தொடர்கிறது. இந்நிலையில் கொடைக்கானலில் சுற்றுலா வளர்ச்சிக்கு கடந்த சில ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகளின் பங்கு என்று சொல்லத்தகுந்த செயல்பாடுகள் எதுவும் இல்லை.

ஏட்டளவில் உள்ள சுற்றுலா திட்டங்கள்:

கொடைக்கானலின் சுற்றுலா வளர்ச்சிக்கு பல திட்டங்கள் தயார் செய்யப்பட்டு அவை செயல்பாட்டிற்கு வராமல் ஏட்டளவில் தான் உள்ளது. வனத்துறை சார்பில் டால்பின்நோஸ் பகுதியில் ‘ஸ்கைவாக்’ அமைக்கும் திட்டம், பைன்பாரஸ்ட் பகுதியில் மரங்களுக்கிடையே மரப்பாலம் அமைத்து அதில் நடந்து செல்லும் அனுபவத்தை தரும் ‘ட்ரி வாக்’ திட்டமும் கிடப்பில் உள்ளது. இதேபோல் கொடைக்கானல் நகராட்சி அலுவலக பகுதியில் இருந்து ஏரியின் மேற்பரப்பை கடந்து சென்று ஜிம்கான மைதானத்தை அடையும் வகையில் சில மீட்டர் தூரம் மட்டுமே செல்லும் ரோப்கார் திட்டமும் ஏட்டளவில் தான் உள்ளது. இந்த திட்டங்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் சாமானிய மக்களையும் மகிழ்விக்கும். அதிக கட்டணமும் இருக்காது.

இதேபோல் கொடைக்கானல் மலை கிராமங்களில் கொட்டிக்கிடக்கும் இயற்கை எழிலை ரசிக்க மலைகிராம சுற்றுலாவையும் சுற்றுலாத்துறை பரிந்துரை செய்துள்ளது. மலை கிராமத்திலேயே தங்கி மலை விவசாயம், அருவிகள் உள்ளிட்டவைகளை காணவும், ‘ரிவர் வாக்’ செய்யவும் சிறந்த பகுதிகள் மலை கிராமங்களில் உள்ளது. இதுபோன்ற சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தினால் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் புதிய இடங்களை பார்த்து மகிழ ஏதுவாக இருக்கும். ‘ஸ்கை வாக்’, ‘ட்ரிவாக்’, ‘ரிவர் வாக்’ போன்ற இயற்கையோடு இணைந்த சுற்றுலாத்தலங்களை ஏற்படுத்தினால் இயற்கைக்கும் எந்தவித பாதிப்பும் இன்றி சுற்றுலாபயணிகளையும் மகிழ்விக்கலாம்.

இந்நிலையில் இயற்கையை பாதித்து உருவாக்கப்படும் பழனி-கொடைக்கானல் ரோப்கார் திட்டம் மூலம் என்ன பயன் பெறப்போகிறது கொடைக்கானல் சுற்றுலா என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.

பழனி- கொடைக்கானல் ரோப்கார் திட்டம்:

பழனியிலிருந்து கொடைக்கானல் செல்ல சாலை மார்க்கமாக 64 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும். இதில் பல கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. காரில் பயணிக்க இரண்டரை மணிநேரம் ஆகும். பழனி- கொடைக்கானல் இடையே ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்பட்டால் வளைந்து நெளிந்து செல்லாமல் நேர்கோட்டில் 12 கி.மீ. தூரம் பயணித்து அரை மணிநேரத்தில் கொடைக்கானலை அடையலாம் என்கின்றனர். பழனியில் ரோப்கார் நிலையம் தேக்கந்தோட்டம் பகுதியிலும், கொடைக்கானலில் குறிஞ்சியாண்டவர் கோயில் பகுதியிலும் அமையும் என திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் நிதியுதவியுடன் இந்த திட்டம் 500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. இந்த திட்டம் தொடங்கி 18 மாதங்களில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என்கின்றனர். இத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்ட ஆய்வுப்பணிகள் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டம் நிறைவுபெற்றால் இந்தியாவிலேயே நீண்டதூரம் பயணிக்கும் ரோப்கார் இது தான் என்கின்றனர்.

சுற்றுலா ஆர்வலர் அப்பாஸ்
சுற்றுலா ஆர்வலர் அப்பாஸ்

சுற்றுலா ஆர்வலர்களின் வரவேற்பும், இயற்கை ஆர்வலர்களின் எதிர்ப்பும்:

ரோப்கார் மூலம் குறுகிய நேரத்தில் கொடைக்கானலுக்கு அதிகம் பேர் சென்றடையலாம். மேலும் வாகன போக்குவரத்து குறையும் என்பதால் கார்பன் உமிழ்வு குறையும் இதன் மூலம் இயற்கை பாதுகாக்கப்படும் என்கின்றனர். இதுகுறித்து கொடைக்கானலை சேர்ந்த சுற்றுலா ஆர்வலர் அப்பாஸ் கூறுகையில், கொடைக்கானலுக்கு இதுவரை பெரிதாக எந்ததிட்டமும் வரவில்லை. இதுபோன்ற திட்டத்தால் கொடைக்கானல் மேலும் முக்கியத்துவம் பெறும். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும். இதன்மூலம் சுற்றுலாவளர்ச்சி பெறும். எனவே இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்றவேண்டும் என்றார்.

இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கூறும் இயற்கை ஆர்வலர்கள், இந்த திட்டம் செயல்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் பல உள்ளன என்கின்றனர். கொடைக்கானல்- பழனி இடையே ரோப்கார் திட்டம் முழுக்க முழுக்க வனப்பகுதிகள் வழியாகவே செல்ல உள்ளது. இடைப்பட்ட தூரத்தில் எத்தனை இரும்பு தூண்கள் அமைக்கப்படவுள்ளது என்பது தெரியவில்லை. நிச்சயம் அதிகப்படியான இரும்பு தூண்கள் அமைக்க வேண்டியதிருக்கும். இதற்காக எத்தனை மரங்கள் வெட்டவேண்டும். மேலும் ரோப்கார் செல்லும் வழியில் குறுக்கிடும் மரங்கள் தொடர்ச்சியாக எத்தனை வெட்ட வேண்டியிருக்கும் என்பதை கணக்கிடமுடியாது. இதன் மூலம் பறவையினகளுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் ரோப்கார் திட்டமிடப்பட்டுள்ள பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கிறது. இவை குடிநீருக்காக மலையடிவாரத்தில் உள்ள பாலாறு பொருந்தலாறு அணைக்கு வந்து செல்வது வழக்கம். யானைகள் இரும்பு தூண்களை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது. ஒரே இயந்திரம் மூலம் கொடைக்கானல் வரை ரோப்காரை இயக்கமுடியாது. இடையில் ஏதேனும் ஒரு இடத்தில் இயந்திரம் பொருத்தவேண்டும். மின்தடை ஏற்பட்டால் தொடர்ந்து இயக்க ஜெனரேட்டர் வைக்கவேண்டும். இதற்கு வனத்திற்குள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவேண்டும். ரோப்கார் செல்லும் பாதையில் பல சிற்றருவிகள் உருவாகி அவை சிற்றாறுகளாக மாறி பாலாறு, பொருத்தல் ஆறு என மலைப்பகுதிகளில் ஒன்றுசேர்ந்து ஓடிவந்து மலையடிவாரத்தில் உள்ள பாலாறு பொருந்தலாறு அணையை அடைகிறது.

ரோப்காரில் செல்வோரால் தேவையற்ற பொருட்களை தூக்கி எறிவது போன்ற செயல்களால் இந்த இயற்கை பகுதி மாசு அடைய வாய்ப்புள்ளது. பழனியில் இருந்த கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள சில கிலோ மீட்டர் தூரம் அமையவுள்ள ரோப்கார் நிலையத்திற்கு காரில் தான் செல்லவேண்டும். பேருந்து வசதி செய்யப்பட்டாலும், கொடைக்கானலில் ரோப்காரில் இருந்து இறங்கி பிற சுற்றுலாத்தலங்களுக்கு காரில் தான் பயணிக்கவேண்டும். வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து காரில் வருபவர்கள் ரோப்காரில் சென்றாலும், அவர்கள் பயணிக்கும் வாகனத்தை ஓட்டுநர் மூலம் கொடைக்கானல் வரவழைத்து விடுவார்கள். அங்கு சுற்றுலாத்தலங்களை சுற்றிப்பார்க்க வாகனம் அவசியம் என்பதால். இதன்மூலம் ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்பட்டால் வாகன போக்குவரத்து குறையும் என்பது உண்மையில்லை என்கின்றனர்.

கொடைக்கானல்- பழனி ரோப்கார் திட்டத்தை வரவேற்பவர்கள் ஒரு முறை நிதானித்து பழனி மலைக்கோயிலில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோயில் வரை சில மீட்டர் தூரம் 3 நிமிடம் செல்லக்கூடிய ரோப்கார் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்த்தாலே இந்த திட்டம் குறித்து தெளிவு பிறந்துவிடும் என்கின்றனர். தற்போதும் அதிக காற்று, கன மழை நேரத்தில் பழனி மலைக்கோயிலுக்கு ரோப்கார் இயக்கப்படாமல் நிறுத்தப்படுவது தொடர்கிறது. 3 நிமிடம் பயணிக்ககூடிய ரோப்கார் நிலையே இப்படி என்றால் 30 நிமிடங்கள் ஆள்அரவமற்ற வனப்பகுதியில் பயணிப்பது, மழைகாலத்தில் பயணிப்பது, பனிமூட்டம் நிறைந்த மாதங்களில் பயணிப்பது, பலத்த காற்று வீசும் நேரத்தில் பயணிப்பது என அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் பார்க்க வேண்டியதுள்ளது.

வறண்ட பகுதி, வனப்பகுதி என்றாலும் ரோப்கார் திட்டத்தை எத்தனை நீண்டதூரம் வேண்டுமானாலும் செயல்படுத்துவதில் எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் கொடைக்கானல் மலைப்பகுதி குளிர், காற்று, மழை, பனிமூட்டம் என பல்வேறு காலநிலைகளை கொண்ட பகுதியாக இருப்பதால் இங்கு ரோப்கார் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது என்பது எந்தவிதத்தில் சாத்தியம் என தெரியவில்லை என்கின்றனர்.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர் மினுஅவாரி கூறுகையில், கொடைக்கானலில் தற்போது வந்து செல்லும் சுற்றுலாபயணிகளே அதிகம். இவர்களுக்கான அடிப்படை தேவைகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக கார் நிறுத்தம் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் என்பது வாடிக்கையாக உள்ளது. இந்தநிலையில் மேலும் சுற்றுலாபயணிகள் வருகை என்பதை எப்படி சமாளிப்பது. முறையாக சுற்றுலாபயணிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்துதரவேண்டும். பின்னர் சுற்றுலாவை விரிவாக்கம் செய்யவேண்டும். இந்த திட்டம் முழுமையாக வனப்பகுதிக்குள் நடைபெறுகிறது. எனவே மரங்கள் அழிப்பு, வனவிலங்குகள் பாதிப்பு, இயற்கை வளம் பாதிப்பு என்பதை இத்திட்டத்தை செயல்படுத்துபவர்களால் மறுக்கமுடியாது. மற்ற மலைப்பகுதியை போல் அல்ல கொடைக்கானல் மலைப்பகுதி. காலநிலை மாற்றம் ஒவ்வொரு மாத்திற்கும் வேறுபடுகிறது. இவற்றையெல்லாம் சமாளித்து கொடைக்கானல்- பழனி ரோப்கார் வெற்றிகரமாக செயல்படுமா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன் பலமுறை யோசிப்பது நல்லது என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in