
கர்நாடகா மாநில அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக அடிப்படை சம்பளத்தை 17 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று அறிவித்துள்ளார்.
கர்நாடகா மாநில அரசு துறைகளில் சுமார் 9 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களின் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்கும் நோக்கத்தில் 7-வது ஊதிய குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. இந்த குழுவின் இடைக்கால அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் பெற வேண்டும் என்று கர்நாடக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஊதியக்குழுவின் இடைக்கால அறிக்கை பெறப்படும் என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார்.
இந்த நிலையில் மாநில அரசு ஊதியக் குழுவின் இடைக்கால அறிக்கையை பெறாவிட்டால் இன்று (மார்ச் 1) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் சி.எஸ்.ஷடக்சரி ஏற்கெனவே அறிவித்தார். ஊதிய விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், கர்நாடகா மாநில அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக அடிப்படை சம்பளத்தை 17 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று அறிவித்துள்ளார். மாநில அரசு ஊழியர் சங்கத் தலைவர், அலுவலகப் பணியாளர்கள், நிதித்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் குழுவும் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தை ரத்து செய்ய தற்போது வாய்ப்பில்லை என்று கர்நாடக மாநில அரசு ஊழியர் சங்கத் தலைவர் சி.எஸ்.ஷடக்சரி கூறியுள்ளார்.