
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு உடைமைகளில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட ரூ.46 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான தங்கத்தை திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மலேசியாவில் இருந்து திருச்சி வரும் பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது பயணி ஒருவர் கொண்டு வந்த உடைமை மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த உடைமையை சோதனை செய்தனர். அப்போது அதில் கம்பிகள் மற்றும் சங்கிலிகள் போன்று மறைத்து ரூ.46 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான 826 கிராம் 24 கேரட் தூய தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த பயணியிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர், தஞ்சாவூரை சேர்ந்த அஷ்ரப் அலி(வயது 48) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.