மின்னணு விளையாட்டுப் பொருட்களுக்குள் மறைத்து தங்கம் கடத்தல்: சுங்கத்துறையினர் அதிரடியாக பறிமுதல்

மின்னணு விளையாட்டுப் பொருட்களுக்குள் மறைத்து தங்கம் கடத்தல்: சுங்கத்துறையினர் அதிரடியாக பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திற்கு  இரு வேறு நாடுகளில் இருந்து வந்த  பயணிகள் இருவர் மின்னணு பொருட்களில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை  சுங்கத்துறையினர் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். 

தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து நேற்று இரவு கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம்  நுண்ணறிவு  பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.  அவர்களில்  பயணி ஒருவர் மின்னணு  விளையாட்டு பொருளில் 667 கிராம் எடையுள்ள ரூ.34,26,380 மதிப்புள்ள தங்கத்தை மறைத்து எடுத்து வந்துள்ளார். அந்த தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்தப் பயணியிடம்  தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

அதே போல துபாயிலிருந்து வந்த விமானத்தில் வந்த பயணி ஒருவர் மின்னணு விளையாட்டு பொருளில் 676 கிராம் எடையுள்ள ரூ.34,72,613 மதிப்புள்ள தங்கத்தை மறைத்து எடுத்து வந்துள்ளார். அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரிடமும்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக் காலமாக திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளில் சிலர்  அதிக அளவில் தங்கத்தை மறைத்து கடத்தி  வருவது அதிகரித்துள்ளது. இருப்பினும்   நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் தங்கள் சோதனையை தீவிரப்படுத்தி  தொடர்ந்து தங்க கடத்தலைக் கண்டறிந்து  பறிமுதல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in