சிவகங்கையில் கள ஆய்வில் கிடைத்த தங்க குண்டுமணிகள்: தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பு!

கிடைக்கப்பெற்ற தங்க பொருள்கள்
கிடைக்கப்பெற்ற தங்க பொருள்கள்

காளையார்கோயில் அருகே கொல்லங்குடி பகுதியில் தொல் நடைக் குழுவினரால் கண்டெடுக்கப்பட்ட தங்க பொருள்கள் தமிழ்நாடு தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், களையார்கோயில் அருகே கொல்லங்குடி ஊராட்சி பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி, ஓடுகளுக்கிடையே கிடைத்த தங்கத்தாலான குழாய்கள் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவகங்கை தொல் நடைக் குழு நிறுவனர் புலவர் காளிராசா செய்தியாளர்களிடம் கூறும்போது, "கொல்லங்குடி ஊராட்சிக்குட்பட்ட சுந்தனேந்தல் சேகரம் உசிலனேந்தல் கண்மாய் பகுதியில், கடந்த 25-ம் தேதி, சிவகங்கை தொல்நடைக்குழு உறுப்பினர் சரவணன் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, முதுமக்கள் தாழி, ஓடுகளுக்கிடையே தங்கம் உள்ளிட்ட பொருள்கள் கிடைத்திருப்பதாக எனக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் நேரில் சென்று விரிவான ஆய்வு மேற்கொண்டோம். அதில், தாலி போன்ற கயிற்றுச் சரடில் கோர்த்து அணியக்கூடிய குண்டுமணி என அழைக்கப்படும் அணிகலனாக இருக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்தது.

தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது
தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது

தாலிச்சரடில் உள் நுழைத்து கோர்த்து அணியக் கூடிய தங்கத்தாலான இப்பொருள்களுள் நீண்டு குழாய் போல் இருப்பதை யானைக் குழாய் என்றும், குழாய் என்றும், கூறுகின்றனர். நீட்சி இல்லாமல் சிறிய அளவில் உள்ளதை மணி என்றும், குண்டுமணி என்றும், அழைக்கின்றனர்.

மேலும், நமக்கு கிடைத்துள்ள பொருள்கள், குழாய் போன்று நீண்டு இல்லாமலும், மணி போன்று சிறிய அளவில் இல்லாமலும் இடைப்பட்டதாக உள்ளது. மத்தளத்தை போன்ற வடிவத்துடன், இருபக்கம் சிறிதாகவும், நடுப்பகுதி பெரிதாகவும் காணப்படுகிறது. இரு பக்கமுனைகளிலும் நடுப்பகுதியிலும் வேலைப்பாடுகள் உள்ளன.

கிடைத்ததில், ஒன்று பார்வைக்கு நல்ல நிலையிலும் மற்றொன்று சிதைந்த நிலையிலும் உள்ளது. இரண்டும் ஒரே இடத்தில் கிடைத்ததாலும், ஒன்று சிதைவுற்று இருப்பதால் இது பழமையானதாக இருக்கலாம். முதுமக்கள் தாழிக்குள் இருந்து வெகு நாட்பட்டு ஓடுகளோடு வெளிப்பட்டிருக்கலாம் என எண்ண முடிகிறது.

இப்பகுதியில் முதுமக்கள் தாழிகள் முற்றிலும் சிதைந்த நிலையில் வெறும் ஓடுகளாய் பரந்து பட்டு மேற்பரப்பில் காணப்படுகிறது. இவ்வாறான மேடுகளை அடுத்தடுத்து காணமுடிகிறது. இந்த மேடுகளில் சுண்ணாம்புக் கற்கள் மேலெழும்பி அதிக அளவில் இருப்பதால் தாழி புதைத்த இடங்கள் என்பதை மேலும் உறுதி செய்ய முடிகிறது.

கண்டெடுத்த இரண்டு குண்டுமணிகள் குறித்து தொல்லியல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் வழிகாட்டுதலின்படி, கடந்த 26-ம் தேதி சிவகங்கை மாவட்ட தொல்லியல் அலுவலர் பரத் குமார் மற்றும் ராமநாதபுர மாவட்ட தொல்லியல் அலுவலர் சுரேசு ஆகியோர் நேரடியாக இவ்விடத்தை பார்வையிட்டனர்.

அதன் பிறகு அங்கு கண்டெடுக்கப்பட்ட தங்கத்தாலான பழமையான குழாய் போன்ற பொருள்கள் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இப்பொருள் குறித்து தொல்லியல் துறையினரின் விரிவான ஆய்வுக்குப் பிறகு இறுதி முடிவு எட்டப்படும். வருவாய்த்துறை உதவியாளர் சுரேசு மற்றும் சிவகங்கை தொல்நடைக் குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் உடனிருந்தனர்'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in