
கோகுல்ராஜ் கொலைவழக்கின் பிறழ் சாட்சியான, சுவாதியின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ். தன்னுடன் படித்த சக தோழியான சுவாதியுடன் கடந்த 2015 ஜூன் 23-ம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருந்தார். இரவு வெகு நேரமாகியும் கோகுல்ராஜ் வீடு திரும்பாததால், அவருடைய பெற்றோர் அவரைத் தேடினர்.
இதுதொடர்பாக, திருச்செங்கோடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில் தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜின் ஆட்கள் கோகுல்ராஜை கடத்தியதாக கூறப்பட்டது. ஜூன் 24-ம் தேதி பள்ளிப்பாளையம் அருகே தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் உடல் மீட்கப்பட்டது.
தமிழகத்தை உலுக்கிய இந்த ஆணவக்கொலை தொடர்பான வழக்கு, மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் கோகுல்ராஜை ஆணவக்கொலை செய்ததாக, தீரன் சின்னமலை பேரவை நிறுவனத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்ற 10 பேரும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். அதேபோல, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கர் உள்ளிட்ட 5 பேர் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா, வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்த்து வருகிறது. இந்த வழக்கில், பிறழ் சாட்சியான சுவாதி மீது தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை வழக்குத் தொடர்ந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சுவாதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுவாதி தரப்பில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் . இதையடுத்து கோகுல்ராஜ் கொலை வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.