‘பாஜகவினரை அழித்தொழிக்க கடவுள் என்னை அனுப்பியிருக்கிறார்’ - அதிரவைத்த அர்விந்த் கேஜ்ரிவால்

‘பாஜகவினரை அழித்தொழிக்க கடவுள் என்னை அனுப்பியிருக்கிறார்’ - அதிரவைத்த அர்விந்த் கேஜ்ரிவால்

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின்போது டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தை எழுப்பினார். கூடவே, பாஜகவினரை அழிப்பதற்காக கடவுள் தன்னை அனுப்பியிருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

டெல்லியின் சமூக நலத் துறை அமைச்சர் ராஜேந்திர பால் கெளதம், சமீபத்தில் மதமாற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில் நூற்றுக்கணக்கானோர் இந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறினர். அந்நிகழ்ச்சியின்போது இந்து மதத்துக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பான காணொலிகளும் வைரலாகின.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில், ஆளும் பாஜகவுக்குத் தாங்கள்தான் போட்டி என்று ஆம் ஆத்மி கட்சி கோதாவில் இறங்கியிருக்கிறது. அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட அக்கட்சித் தலைவர்கள் அடிக்கடி குஜராத் சென்று பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சூழலில், மதமாற்ற விவகாரத்தை வைத்து ஆம் ஆத்மி கட்சி மீதும் அர்விந்த் கேஜ்ரிவால் மீதும் பாஜகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். அமைச்சர் ராஜேந்திர பால் கெளதமைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் வடோதராவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால், ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டார். மேலும், “பாஜகவினர் என்னைப் பற்றித் தவறாகப் பேசுகின்றனர். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால், அவர்கள் என்னை வெறுக்கின்றனர். கண்மூடித்தனமான அந்த வெறுப்பின் காரணமாக அவர்கள் கடவுள்களைக் கூட அவமதிக்கின்றனர். நான் அனுமனின் பக்தன். அவர்கள் கம்சனின் வழித்தோன்றல்கள். நான் கிருஷ்ண ஜெயந்தி நாளில் பிறந்தவன். கடவுள் ஒரு சிறப்பு நோக்கத்துக்காக என்னை அனுப்பியிருக்கிறார். ‘போ... என்று கம்சனின் வழித்தோன்றல்களையும் ஊழல் செய்பவர்களையும் அழித்துவிடு’ என்னை அனுப்பியிருக்கிறார்” என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியை விமர்சித்து பாஜகவினர் வைத்திருந்த பேனர்களை அக்கட்சியினர் அகற்றினர். பாஜகவை விமர்சித்து ஆம் ஆத்மி கட்சியினர் வைத்திருந்த பேனர்களை பாஜகவினர் கிழித்தெறிந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in