30 மடங்கு அதிகம்: வாட்டி வதைக்கும் வெப்ப அலை குறித்து அதிர்ச்சி அறிக்கை!

30 மடங்கு அதிகம்: வாட்டி வதைக்கும் வெப்ப அலை குறித்து அதிர்ச்சி அறிக்கை!

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வெப்ப அலை 30 மடங்கு அதிகரிக்கும் சூழல் உருவாகியிருப்பதாக அறிக்கை வெளியாகியிருக்கிறது. இந்த அறிக்கையில் பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்த முக்கியத் தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

தெற்காசியாவில் நிலவும் கடும் வெப்பத்தில் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் பருவநிலை மாற்றம்தான் எனக் கருதப்படுகிறது.உலகின் வானிலையின் பண்புக்கூறு குறித்த ஆய்வுகளை நடத்தும் டபிள்டபிள்யூஏ எனும் அறிவியல் கூட்டமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானியான பிரெடரிக் ஓட்டோவும் அவரது சக விஞ்ஞானிகளும் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்திருக்கிறது.

புவிவெப்பமயமாதல் தொடர்ந்து நிகழ்ந்துவருவதால், கடுமையான வெப்ப அலைகள் குறுகிய கால இடைவெளிக்குள் மீண்டும் மீண்டும் ஏற்படுவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அந்த வகையில் தெற்காசியாவில் முன்பைவிட 30 மடங்கு அதிகமான வெப்ப அலைகள் தற்போது வீசிவருவதாக பிரெடரிக் ஓட்டோ தெரிவித்திருக்கிறார். மனிதர்களின் செயல்பாடுகளால் பருவநிலையில் மாற்றம் ஏற்படும் சூழல் உருவாவதற்கு முன்னர், இப்படியான வெப்ப அலைகள் பொதுவாக 3,000 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஏற்பட்டன என அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தொழிற்புரட்சி காலத்துக்கு முன்பு இருந்த வெப்பநிலையைவிட, 1.5 டிகிரி செல்சியஸுக்கும் மிகாமல் புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேண்டும் என பாரிஸ் பருவநிலை மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. இதுதொடர்பான நடவடிக்கைகளில் உலக நாடுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட இதுபோன்ற வெப்ப அலைகள் ஏற்படும் என அவர் எச்சரித்திருக்கிறார்.

கடும் வெப்பம், மழைப்பொழிவில் வழக்கத்தைவிட 60 முதல் 70 சதவீதம் குறைந்திருப்பது போன்றவற்றால் இந்தியாவில் கோதுமை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, இந்தியாவிலிருந்து கோதுமை ஏற்றுமதி செய்வது தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே உக்ரைன் போர் காரணமாக உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவிலிருந்து கோதுமை ஏற்றுமதி செய்வது தடைபட்டிருப்பதால் உலக அளவில் கோதுமை விலை அதிகரித்திருக்கிறது.

டபிள்டபிள்யூஏ அமைப்பின் அறிக்கையை பிரெடரிக் ஓட்டோவுடன் இணைந்து தயாரித்திருக்கும் ஃபஹத் சயீத் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். இந்த வெப்ப அலையில் இந்தியாவும் பாகிஸ்தானும் பாதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் ஃபஹத் இதில், ஏசி போன்ற வசதிகள் இல்லாத ஏழைகளும் விளிம்புநிலை மக்களும்தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in