உலக கோடீஸ்வரர் பட்டியலில் 4-வது இடத்தில் இருந்த அதானி, ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின் தாக்கத்தால் இன்று 25-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இந்தியாவில் நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற 2014-ம் ஆண்டில் உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் 609-வது இடத்தில் கவுதம் அதானி இருந்தார். இந்த நிலையில், 2022-ம் ஆண்டு கோடீஸ்வரர் பட்டியலில் கவுதம் அதானி 4-வது இடத்திற்கு வந்தார். இவரது இந்த திடீர் வளர்ச்சி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் சமீபத்தில் அதானி நிறுவனம் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதிமுறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அக்குழுமத்திற்கு அதிக அளவில் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.
இதையடுத்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. அத்துடன் அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு, முதல் வாரத்தில் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பைச் சந்தித்துள்ளது. இதனால் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் வீழ்ச்சியடைந்தது. இதனால் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்புடைய பங்குகளை விற்பனை செய்யும் முடிவை திரும்பப் பெறுவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
மேலும் முதலீட்டாளர்கள் பணம் திரும்பி அளிக்கப்படும் என்றும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு சரிந்ததைத் தொடர்ந்து கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ரூ.9,92,000 கோடியாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு தற்போது ரூ.3,96,670 கோடியாக சரிந்துவிட்டது.
இதனால் அதானியின் சொத்து மதிப்பு இன்று ரூ.22,313 கோடி வீழ்ச்சியால் கோடீஸ்வரர் பட்டியலில் 25-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.