
வேலூரில் ரூ. 25 லட்சத்திற்கு புலிக்குட்டி விற்பனை என ஆன்லைனில் விளம்பரம் செய்த இளைஞரை கைது செய்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப் மற்றும் ஆன்லைனில் புலி குட்டிகள் விற்பனை செய்யத் தயாராக உள்ளது. தேவைப்படுபவர்கள்
அணுகலாம் என்று விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வேலூர் வனச்சரகத்திற்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து வேலூர் வனத் துறையினர் வாட்ஸ் அப்பில் வந்த எண் குறித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த செல்போன் வைத்திருப்பவர் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்த பார்த்திபன் (24) என்பதும், அவர் வேலூர் சார்பனா மேடு என்ற பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது.
இதனையடுத்து வேலூர் வனத் துறையினர் பார்த்திபனை கைது செய்து விசாரணை நடத்தினர். அவரின் செல்போனைக் கைப்பற்றி ஆய்வு செய்ததில், பூனைக்குட்டிக்கு சாதம் பிசைந்து வைப்பதைப்போல புலிக்குட்டிகளுக்கு சாதம் பிசைந்து வைக்கும் படங்களை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸாக வைத்திருந்தார். அந்த படத்துக்குக்கீழ் `இது மூன்று மாத குட்டி. புக்கிங் செய்தால் 10 நாள்களில் டெலிவரி செய்யப்படும். விலை ரூபாய் 25 லட்சம்’ என்று கேப்ஷனையும் பதிவு செய்திருந்தார். இதையடுத்து, அவர் தங்கியிருந்த வீடு முழுவதும் தேடிப் பார்த்த போது வனத்துறையினரிடம் புலிக்குட்டி எதுவும் சிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் தமிழ். இவர் சென்னையில் சென்னை செல்ல பிராணிகளை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரும் பார்த்திபனும் நண்பர்கள். இவர்கள் தமிழகத்தில் விலங்குகள் தொடர்பாக கண்காட்சி எங்கு நடந்தாலும் அங்கு செல்வது வாடிக்கை. செல்லப் பிராணிகளின் கண்காட்சியில் தங்களுக்குப் பிடித்த விலங்குகள் மற்றும் பறவைகளை வாங்கி ஆன்லைன் மூலமாகவும், கடை மூலமாகவும் கூடுதல் விலைக்கு வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் தான், தற்போது பார்த்திபன் வாட்ஸ்அப் மற்றும் அவரது ஸ்டேட்டஸில் புலிக்குட்டி விற்பனை தொடர்பாக விளம்பரம் செய்துள்ளார். இது வெறும் விளம்பர மோசடியா அல்லது உண்மையில் புலிக்குட்டி அவரிடம் உள்ளதா என்பது குறித்து வேலூர் வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் மூலம் இது போன்ற வனவிலங்குகளை ஏற்கெனவே அவர் விற்பனை செய்துள்ளாரா என்ற கோணத்திலும் வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பார்த்திபனின் செல்போன் எண்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே இது குறித்து முழு விவரம் தெரியவரும் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணை தொடர்பாக சைபர் கிரைம் போலீஸாரின் உதவியை வனத் துறையினர் நாடியுள்ளனர்.