சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யவில்லை: ஆளுநர் குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில்

சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யவில்லை: ஆளுநர் குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில்

``தீட்சிதர்கள் மற்றும் அவர்கள் மீதான குழந்தை திருமண குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறுமிகள் யாரிடமும் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்படவில்லை" என டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார்.

அண்மையில் ஆங்கில நாளிதழுக்கு ஆளுநர் ரவி அளித்த பேட்டியில், "சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தைத் திருமணங்கள் நடப்பதாக 8 பேர் மீது புகார்களை அளித்தனர். தீட்சிதர்கள் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் என்று புகார் கூறினர். 6, 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை, வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, 'இரண்டு விரல் பரிசோதனை' என்னும் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த கொடுமைகளால் அந்த சிறுமிகள் சிலர் தற்கொலைக்கு முயன்றனர்" என்ற பகீர் தகவலை வெளியிட்டார்.

இதனிடையே, ஆளுநரின் அந்த பேட்டியின் அடிப்படையில் சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் விவகாரத்தில் தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ததோடு, இதுகுறித்து விசாரித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில், தீட்சிதர்கள் மற்றும் அவர்கள் மீதான குழந்தை திருமண குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறுமிகள் யாரிடமும் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்படவில்லை என டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறுமிகள் யாரிடமும் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்படவில்லை. சிறுமிகள் சிலர் தற்கொலைக்கு முற்றதாக பரவும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. தீட்சிதர்கள் குழந்தை திருமணம் தொடர்பாக உண்மையை கண்டறிந்த பின்னர் குற்றத்தில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளில் சட்ட ஆலோசகரின் அறிவுரைப்படி இரண்டு சிறுமிகள் மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்கள் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை'' என கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in