ஒரே அறையில் படித்துக்கொண்டிருந்தபோது காதலனை காதலி கத்தியால் குத்திக்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் புனேவில் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் வகோலி பகுதியில் கல்லூரி 2-ம் ஆண்டு படித்து வந்தவர் யஷ்வந்த் முண்டே (22). வாடகைக்கு அறை எடுத்துப் படித்து வந்த யஷ்வந்துடன் அதே கல்லூரியில் ஆகான்க்சா பன்ஹாலே (21) என்ற இளம் பெண்ணும் படித்து வந்துள்ளார். ஒரே பாடப்பிரிவில் படித்து வந்த இருவரும் காதலித்துள்ளனர். இதனிடையே, கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடந்து வந்துள்ளது. இதனால், காதலன் யஷ்வந்த் தங்கியிருந்த அறைக்கு ஆகான்க்சா நேற்றிரவு படிப்பதற்காக சென்றுள்ளார்.
இந்தநிலையில், இன்று காலை காதலர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த ஆகான்க்சா காதலன் யஷ்வந்த்தை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த யஷ்வந்த் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். படிக்கச் சென்ற காதலனை காதலி கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.