`என்னுடைய நகை, பணத்தை கொடு'; காதலனை டார்ச்சர் செய்த காதலி: விசாரிக்க சென்றபோது அதிர்ந்த போலீஸ்காரர்

கைதான செல்வி
கைதான செல்வி

காதலன் வீட்டு முன்பு நகையை கேட்டு தகராறில் ஈடுபட்ட காதலியிடம் விசாரணை நடத்த சென்றபோது கையை கடித்ததால் காவலர் அதிர்ச்சியடைந்தார்.

சென்னை திருவொற்றியூர் எஸ்.பி. கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திர மோகன். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில் இரண்டாவதாக ரேணுகாதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது முதல் மனைவிக்கு பிறந்த ரேவேந்திரகுமார் (38) என்பவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரேவேந்திரகுமார் புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த செல்வி(31) என்பவரை காதலித்து வந்தார். பின்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 17/1/21-ம் தேதி அன்று இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பே செல்வி தனது காதலன் ரேவேந்திர குமாரிடம் 5 சவரனின் தாலி சரடு, ஒரு பைக் மற்றும் 1 லட்சம் ரொக்கம் வேண்டும் என கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரேவேந்திரகுமார் மற்றும் அவரது பெற்றோர் செல்வியுடன் நடக்க விருந்த திருமணத்தை நிறுத்திவிட்டனர். இதில் ஆத்திரமடைந்த செல்வி அடிக்கடி காதலன் ரேவேந்திரகுமார் வீட்டிற்கு சென்று தகராறு செய்து வந்துள்ளார். நேற்று மாலை வழக்கம் போல் செல்வி காதலன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதால் அவரது தாய் ரேணுகாதேவி உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, திருவொற்றியூர் காவல்நிலைய தலைமை காவலர் சரவணன் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது, விசாரணைக்கு சென்ற காவலர் சரவணனை தனது செல்போனில் செல்வி வீடியோ எடுத்துள்ளார். அதனை காவலர் சரவணன் தடுத்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த இளம்பெண் செல்வி, காவலர் சரவணன் கையை கடித்து அவரது சீருடையை கிழித்து தகராறில் ஈடுபட்டதுடன், எதற்காக எனது மார்பை பிடித்தாய் என கேட்டு சத்தம்போட்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்து போன காவலர் சரவணன் உடனே மகளிர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு சென்ற பெண் உதவி ஆய்வாளர் ருக்மணி தலைமையிலான போலீஸார், செல்வியை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் செல்வி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். விசாரணைக்கு சென்ற காவலர் கையை கடித்து பெண் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in