9 ஆயிரம் ரூபாய் ஸ்மார்ட்போன் வாங்க ரத்தத்தை விற்க முயன்ற சிறுமி: ரத்த வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி

9 ஆயிரம் ரூபாய் ஸ்மார்ட்போன் வாங்க ரத்தத்தை விற்க முயன்ற சிறுமி: ரத்த வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி

மேற்கு வங்கத்தில் ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக 16 வயது சிறுமி தனது ரத்தத்தை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் தாபானைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது கிராமத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பலூர்காட் மாவட்ட மருத்துவமனையின் ரத்த வங்கியை அணுகியுள்ளார். எதற்காக ரத்தம் கொடுக்கிறாய் என ரத்தவங்கி ஊழியர்கள் கேட்ட போது, படிப்பு செலவிற்காக ரத்தத்தை விற்க வந்ததாக சிறுமி கூறினார்.

ஆனால், அதை நம்பாத ரத்த வங்கி ஊழியர்கள், தொடர்ந்து சிறுமியிடம் விசாரணை நடத்திய போது ஸ்மார்ட் போன் வாங்குவதற்காக ரத்தத்தை விற்க வந்ததாக கூறினார். இதனால் ரத்த வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ரத்த வங்கி அதிகாரிகள் சைல்டுலைனுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு முன் சிறுமிக்கு ஆலோசனை வழங்கினர்.

இதுகுறித்து பலூர்காட் மாவட்ட மருத்துவமனையின் ரத்த வங்கியைச் சேர்ந்த கனக்குமார் தாஸ் கூறுகையில், " காலை 10 மணியளவில் ஒரு சிறுமி எங்களை அணுகினார். மாவட்ட மருத்துவமனையின் ரத்த வங்கி என்பதால் அவர் ரத்தம் எடுக்க வந்ததாக முதலில் நினைத்தோம். ஆனால், அவர் எங்களுக்கு ரத்தத்தை விற்க விரும்புவதாகச் சொன்னபோது, ​​நாங்கள் அதிர்ச்சியடைந்தோம் ” என்றார்.

சிறுமிக்கு ஆலோசனை வழங்கிய மனநல ஆலோசகர் ரீட்டா மஹதோ கூறுகையில், " ரத்தம் விற்க வந்தவர் மைனர் என்பதால் அங்கிருந்த ஊழியர்கள் 1098-க்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து நாங்கள் ரத்த வங்கிக்குச் சென்று அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினோம். ஆன்லைன் ஷாப்பிங் செயலி மூலம் அந்த சிறுமி மொபைல் ஃபோனை ஆர்டர் செய்ததாக எங்களிடம் கூறினார். இதன் விலை சுமார் ரூ.9 ஆயிரம் என்றும், வியாழன் அன்று டெலிவரி செய்யப்படும் என்றும் எங்களிடம் கூறினார். அவருக்கு உரிய ஆலோசனை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தோம்" என்றார். ஸ்மார்ட் போன் வாங்குவதற்காக தனது ரத்தத்தை சிறுமி விற்க முயன்ற சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in