
திண்டுக்கல் அருகே மாணவியை கடத்திச் சென்று மலையில் பதுங்கியிருந்த வாலிபரை போக்சோ வழக்கில் போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அரசு பள்ளி ஒன்றில் பயிலும் 7ஆம் வகுப்பு மாணவி ஒருவர், ஜன.7ஆம் தேதி இரவு வீட்டில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க இயலாமல் போனது. இது குறித்து மாணவியின் பெற்றோர் செம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இதன் பொருட்டு, போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். மேலும் கேரளா சென்றும் மாணவியை தேடிவந்தனர். தொடர்ந்து இளைஞர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சிறுமலை பகுதியில் போலீஸார் தேட ஆரம்பித்தனர். இதற்கிடையே தேடப்பட்ட இளைஞர் பள்ளி மாணவியுடன், திண்டுக்கல் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.
விசாரணையில், அந்த இளைஞர் நடுபட்டி இந்திரா நகரைச் சேர்ந்த சக்திவேல்(23) என்றும் ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை கடத்திச் சென்றதும் தெரிய வந்தது.
போக்சோ சட்டத்தின் கீழ் சக்திவேலை கைது செய்த போலீஸார், திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். மேலும் திண்டுக்கல்லில் உள்ள தனியார் காப்பகத்தில் மாணவியை போலீஸார் ஒப்படைத்தனர்.
முன்னதாக மாயமான மாணவியை கண்டுபிடித்து தரக் கோரி மாணவியின் பெற்றோர், அவரது உறவினர்கள் உள்ளிட்டோர் செம்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.