
மதுரையில் பிளஸ் 2 மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த 2 பேர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை புதுாரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி. கொட்டாம்பட்டி அருகே மங்களம்பட்டியைச் சேர்ந்தவர் சிவராமன் (21). இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 2 வாரத்திற்கு முன் சிவராமன், மாணவியை மேலவளவு மலைக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்தனர். அப்போது மேலவளவு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் ஆகியோர் வந்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து சிவராமனையும், மாணவியையும் மிரட்டினர். சிகரெட் வாங்கி வரச்சொல்லி சிவராமனை அனுப்பி வைத்தனர். இதன்பின் மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்தனர். மாணவி அணிந்திருந்த தோடு, அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டனர்.
இதன் பின்னர் சிவராமனுடன் , மாணவியை அனுப்பி வைத்தனர். அடுத்த நாள் செல்போனில் மாணவியை தொடர்பு கொண்டு உனது ஆபாச வீடியோ தங்களிடம் உள்ளது என கூறி 30 ஆயிரம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். பணம் தர மறுத்தால் சமூக வலை தளங்களில் வைரல் செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்தனர். இதனால் அஞ்சிய அம்மாணவி 15 ஆயிரம் கொடுத்தார். மீண்டும் வாட்ஸ் அப் அழைப்பில் சென்று ஆபாச போஸ் கொடுக்கச் சொல்லி மாணவிக்கு மிரட்டல் விடுத்தனர். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் புகாரின் பேரில் விஜயகுமார் (27), வினோத்குமார் (19) ஆகியோரை புதுார் போலீஸார் கைது செய்தனர். 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிவராமனை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.