தென்காசி மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலுக்கு 9 மாதங்களே ஆன குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்து உள்ளது அழகாபுரி கிராமம். இங்குள்ள தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் லிங்கராஜ். இவருக்கு 9 மாதத்தில் பெண் குழந்தை இருந்தது. இந்தப் பெண் குழந்தைக்கு கடந்த சில தினங்களாகவே காய்ச்சல் விட்டு, விட்டு அடித்தது. இதனைத் தொடர்ந்து தங்கள் வீட்டுக்கு அருகாமையிலேயே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு காண்பித்தனர். அவ்வப்போது ஊசி போடும்போது காய்ச்சல் நிற்பதும், மீண்டும் காய்ச்சல் வருவதுமாக இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று திடீரென குழந்தைக்கு அதிக அளவில் காய்ச்சல் அடித்தது. கூடவே மூச்சுத்திணறலும் இருந்தது. இதனைத் தொடர்ந்து பெற்றோர் உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனால் அழகாபுரி கிராமமே சோகத்தில் மூழ்கியது. இதனிடையே அழகாபுரி, ஆலங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மர்மக் காய்ச்சல் மிகத் தீவிரமாகப் பரவுவதாகவும், அதைக் கட்டுப்படுத்தும்வகையில் ஆக்கப்பூர்வமாகப் பணிகளைச் செய்ய சுகாதாரத்துறையினரை முடுக்கிவிட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.