‘முதிர்ச்சியே இல்லாத ராகுல்’ - குட்பை சொன்ன குலாம் நபி ஆசாத்

‘முதிர்ச்சியே இல்லாத ராகுல்’ - குட்பை சொன்ன குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஜி-23 குழுவின் பிரதானமானவருமான குலாம் நபி ஆசாத், கட்சியிலிருந்து விலகியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராகுல் காந்தியின் முதிர்ச்சியற்ற தன்மைதான் கட்சிக்கு ஏற்பட்ட சரிவுக்குக் காரணம் எனும் குற்றச்சாட்டுடன் கட்சியைவிட்டு அவர் வெளியேறியிருக்கிறார். கட்சித் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அவர் இந்த முடிவை எடுத்திருப்பது காங்கிரஸுக்குப் பெரும் பின்னடவை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. இதன் பின்னணி என்ன?

ஜி-23 தலைவர்கள்

காங்கிரஸ் கட்சிக்குள் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும், உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும், நிரந்தரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கட்சித் தலைமையை வலியுறுத்திய ஜி-23 தலைவர்கள் சோனியா காந்திக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்துக்குப் பின்னர், கட்சிக்குள் பல குழப்பங்கள் அரங்கேறிவருகின்றன. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் அவர்கள் எழுதிய அந்தக் கடிதம் பொதுவெளிக்கு வந்ததால், கட்சித் தலைமை கடும் அதிருப்தி அடைந்தது. இதனால், ஜி-23 தலைவர்களுக்கும் சோனியா குடும்பத்தினருக்கும் இடையிலான கசப்பு அதிகரித்தது.

இந்த சூழலில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அஷ்வனி குமார், அக்கட்சியிலிருந்து பிப்ரவரி மாதம் விலகினார். பின்னர், மூத்த தலைவரும் புகழ்பெற்ற வழக்கறிஞருமான கபில் சிபல், அக்கட்சியிலிருந்து விலகிவிட்டதாக மே மாதம் அறிவித்தார். முன்னதாக, தான் இடம்பெற்றிருந்த ஜி-23 குழு தொடர்பாகப் பேசியிருந்த கபில் சிபல், கட்சித் தலைமைக்கு ‘ஜீ ஹுஜூர்!’ (ஆமாம் சாமி!) சொல்பவர்கள் அல்ல அக்குழுவினர் என்று கூறியது பெரும் சர்ச்சையானது. அவரது வீட்டைக் காங்கிரஸ் தொண்டர்களே தாக்கிய சம்பவமும் நடந்தது.

அடுத்தடுத்து வெளியேறும் மூத்த தலைவர்கள்

மூத்த தலைவர்கள், இளைய தலைவர்கள் எனப் பலரும் காங்கிரஸிலிருந்து விலகிவருகின்றனர். அக்கட்சியின் செய்தித்தொடர்பாளரான ஜெய்வீர் ஷெர்கில் சில நாட்களுக்கு முன்னர் கட்சியிலிருந்து விலகினார். ‘முகஸ்துதியில் ஈடுபடுகின்ற, கள நிலவரத்தை முற்றிலுமாகப் புறந்தள்ளுகின்ற, சுயநலத்தில் அக்கறை கொண்ட தனிநபர்களே கட்சி முடிவுகளில் தாக்கம் செலுத்துகின்றனர்’ என சோனியா காந்திக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

சமீபத்தில், காஷ்மீர் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட குலாம் நபி ஆசாத், சில மணி நேரங்களிலேயே அப்பதவியிலிருந்து விலகினார். இமாசல பிரதேசத்தின் வழிகாட்டும் குழுவின் தலைமைப் பதவியிலிருந்து இன்னொரு மூத்த தலைவரான ஆனந்த் சர்மா விலகினார்.

இந்நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்திலிருந்தும் விலகுவதாக குலாம் நபி ஆசாத் இன்று அறிவித்திருக்கிறார். சோனியா காந்திக்கு எழுதியிருக்கும் ராஜினாமா கடிதத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை அவர் மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

தேசிய அரசியலைப் பொறுத்தவரை, பாஜகவிடம் அரசியல் செல்வாக்கை இழந்த காங்கிரஸ், மாநில அரசியலில் மாநிலக் கட்சிகளிடம் தனது இடத்தை இழந்துவிட்டதாக விமர்சித்திருக்கிறார். இதற்கெல்லாம் காரணம், கட்சித் தலைமை கடந்த 8 ஆண்டுகளாக, தீவிர செயல்பாடு இல்லாத தனிநபரைக் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு உயர்த்த முயற்சி செய்ததுதான் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ராகுலின் அரசியல் வருகை - குறிப்பாக 2013 ஜனவரியில் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டது ஆகியவற்றைத் தொடர்ந்தே கட்சியில் சரிவு ஏற்பட்டதாகக் கூறியிருக்கும் குலாம் நபி ஆசாத், கட்சியில் இதற்கு முன்பு நிலவிய ஆலோசனை நடைமுறையை ராகுல் முற்றிலுமாகத் தகர்த்துவிட்டதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

ராகுல் காந்தியிடம் முதிர்ச்சித் தன்மை இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு ஆதரவானது எனக் கூறி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்தின் நகலை, ஊடகங்கள் முன்னிலையில் ராகுல் காந்தி கிழித்தெறிந்தார். அந்தச் சம்பவத்தைத் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் குலாம் நபி ஆசாத், அது குழந்தைத்தனமான செயல் என்றும், பிரதமர் மற்றும் இந்திய அரசின் அதிகாரத்தை அது சிதைத்துவிட்டது என்றும் குலாம் நபி ஆசாத் விமர்சித்திருக்கிறார். 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த படுதோல்விக்கு சோனியா, ராகுல் ஆகிய இருவர் மீதும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இப்படிப் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் அடுக்கி அவர் எழுதியிருக்கும் கடிதம் காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பாஜக ஆட்சியில் பல்வேறு பிரச்சினைகள் நிலவும் நிலையில், மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் விலகியது வருத்தமளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in