குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் இறுதிச்சடங்கு டெல்லியில் முழு ராணுவ மரியாதையுடன் நடைபெற்றுவருகிறது.
பரார் சதுக்கத்தில் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இருவரின் உடல்களும் அங்கு எடுத்துசெல்லப்படுகின்றன. மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அ.ராசா, கனிமொழி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் முப்படைத் தளபதி பிபின் ராவத்துக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் சொந்த மாநிலமான உத்தராகண்டிலிருந்து ஏராளமானோர் டெல்லி வந்திருக்கின்றனர். முப்படைத் தளபதி பிபின் ராவத் - மதுலிகா ராவத் தம்பதியின் மகள்கள் கிருத்திகா, தாரிணி ஆகியோர் தங்கள் பெற்றோருக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
காலை 10 முதல் மதியம் 1.30 மணி வரை பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தலாம் என ராணுவம் கூறியிருந்த நிலையில், ஏராளமான பொதுமக்கள் முப்படைத் தளபதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். பலர் ‘வந்தே மாதரம்’ என உணர்ச்சி பொங்க முழக்கமிட்டனர்.
இறுதிச் சடங்கில் 800 ராணுவ அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். 17 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செய்யப்படுகிறது. இலங்கை, பூட்டான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூத்த ராணுவத் தளபதிகளும், இந்தியாவின் முதல் முப்படைத் தளபதியான பிபின் ராவத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்கள். பல்வேறு நாடுகளின் தூதரகங்களின் சார்பிலும் முப்படைத் தளபதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.
முப்படைத் தளபதி பிபின் ராவத் ராணுவப் பணியை முதன்முதலில் தொடங்கியது 5/11 கூர்க்கா ரைஃபிள்ஸ் படையில்தான். பின்னர் அதன் தளபதியாக உயர்ந்தவர் பிபின் ராவத். அவரது இறுதிநிகழ்ச்சிக்கான எல்லா ஏற்பாடுகளையும் கூர்க்கா ரைஃபிள்ஸ் படையினர்தான் செய்திருக்கிறார்கள்.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களும், நேற்று வெலிங்டன் தளத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டபோது சாலையின் இரு புறங்களிலும் ஏராளமானோர் காத்திருந்து இறுதி வணக்கம் செலுத்தினர். பலர் கதறி அழுதனர். மாணவர்களும் தேசியக் கொடிகளுடன் காத்திருந்து வீர வணக்கம் செலுத்தினர்.
முப்படைத் தளபதியின் இறுதி அஞ்சலி படங்கள்: