கேரளத்தில் கிறிஸ்தவ மிஷினரி நடத்தும் பள்ளிக்கூடத்தில் பாலினப் பாகுபாடு நிகழ்வதாகக் குற்றம்சாட்டி ஆசிரியை பணியை உதறியுள்ளார். இச்சம்பவம் கேரளத்தில் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டம், கொல்லமுலா பகுதியில் சிறுமலர் பப்ளிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு உயர்நிலைப் பிரிவில் ஆங்கில ஆசிரியையாக இருந்த ராணி ஜோசப் தன் வேலையை உதறிவிட்டு பள்ளியில் பாலின பாகுபாடு நிகழ்வதாகவும் குற்றம்சாட்டினார். கடந்த மே மாதம்தான் இவர் இந்தப் பள்ளியில் பணியில் சேர்ந்தார். ஆசிரியைகள் சேலை, சுடிதார் எதுவேண்டுமானாலும் அணியலாம். ஆனால் அதன் மேல் கோட் அணிய வேண்டும். இதேபோல் பள்ளியில் வகுப்பறைக்குள் செல்ல மாணவர், மாணவிகளுக்கு தனித்தனி கதவுகள் உள்ளன. பெண்கள் அவர்களுக்கான பிரத்யேக வகுப்பறை வாசலின் வழியாகத்தான் நுழைகிறார்களா? என்பதைக் கண்காணிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வகுப்பறையில் மாணவனும், மாணவியும் பேசிக்கொள்ளக் கூடாது எனவும் விதி வைத்துள்ளனர் எனவும் ராணி ஜோசப் குற்றம் சாட்டியுள்ளார். ஆசிரியை ராணி மேல் கோட் தைத்திருக்கிறார். ஆனால் அதில் அளவில் சிறுமாற்றம் செய்ய வேண்டி இருந்ததால் அவர் பள்ளிக்கு அணிந்து செல்லவில்லை. அதனால் தான் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்துப் பேசும் ராணி, “தலைமையாசிரியை தொடர்ந்து ஏன் கோட் அணியவில்லை என கேட்டுக் கொண்டே இருந்தார். இது ஒருகட்டத்தில் எனக்குத் துன்புறுத்தலாக மாறியது. வகுப்பு நடத்திக் கொண்டு இருக்கும்போதுகூட தலைமையாசிரியை உள்ளே நுழைந்து கோட் எங்கே எனக் கேட்பார். ஒருகட்டத்தில் எனக்கே நாம் உடுத்தியிருப்பது ஆபாசமான உடையோ என்னும் குற்ற உணர்வைத் தந்தனர். அவர்களுக்கு கல்வியில் பாலின சமத்துவம் பற்றி புரிய வைக்க முயற்சித்தேன். அது நடக்கவில்லை. தலைமையாசிரியை சாஜி ஜோசப்பிற்கு அது குறித்த புரிதல் இல்லை” என்றார். கேரளத்தின் கல்வியாளர்கள் மத்தியில் இச்சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.