பில்கேட்ஸை முந்தினார் அதானி: உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடம்!

பில்கேட்ஸை முந்தினார் அதானி: உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடம்!

போர்ப்ஸின் ரியல் டைம் பில்லியனர்கள் பட்டியலில், இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது பணக்காரர் ஆனார்.

போர்ப்ஸின் ரியல்-டைம் பில்லியனர்கள் பட்டியலின்படி, பில் கேட்ஸின் நிகர சொத்து மதிப்பு 104.6 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. பில் கேட்ஸ் தனது சொத்தில் 20 பில்லியன் டாலர்களை தனது இலாப நோக்கற்ற நிறுவனத்திற்கு நன்கொடையாக அளிப்பதாக அறிவித்த பிறகு தரவரிசையில் அவர் ஒரு இடம் பின்தங்கினார். இந்த நிலையில் 115.5 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் அதானி நான்காவது இடம் பிடித்துள்ளார்.

235.8 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் உலகின் பணக்காரர் பட்டியலில், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் முதல் இடத்தில் உள்ளார். 155.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் லூயிஸ் உய்ட்டனின் சிஇஓபெர்னார்ட் அர்னால்ட் இரண்டாம் இடத்திலும், 143.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அமேசானின் ஜெஃப் பெசோஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளார். 90 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி இந்தப் பட்டியலில் 10வது இடத்தில் இருக்கிறார்.

தற்போது உலகப்பணக்காரர்கள் பட்டியலில் 4-ம் இடம் பிடித்துள்ள அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி, சிறிய சரக்கு வர்த்தக வணிகத்தை துறைமுகங்கள், சுரங்கங்கள் மற்றும் பசுமை எரிசக்தி ஆகியவற்றைக் கொண்ட மிகப்பெரிய கூட்டு நிறுவனமாக மாற்றி புகழ் பெற்றவர்.

2.9 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையவும், 2070க்குள் இந்தியாவின் கார்பன் உமிழ்வில் பூஜ்ஜிய இலக்கை எட்டவும் இந்திய பிரதமர் மோடி எதிர்பார்க்கும் நிலையில், பசுமை எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புக்கான அதானியின் பணிகள் பலன் தரும் என்ற காரணத்தால் அதானி குழுமத்தின் பங்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 600% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன என்று புளூம்பெர்க் அமைப்பு தெரிவித்திருந்தது. சமீபத்தில் அம்பானியை முந்தி ஆசியாவின் முதல் பணக்காரர் என அதானியை புளூம்பெர்க் தேர்ந்தெடுத்தது.

வெறும் மூன்று ஆண்டுகளில், அதானி ஏழு விமான நிலையங்களின் கட்டுப்பாட்டையும், இந்தியாவின் விமானப் போக்குவரத்தில் சுமார் கால்வாசி கட்டுப்பாட்டையும் பெற்றுள்ளார். இப்போது அவரது அதானி குழுமம் நாட்டின் மிகப்பெரிய விமான நிலைய ஆபரேட்டர், பவர் ஜெனரேட்டர் மற்றும் சிட்டி கேஸ் சில்லறை விற்பனையாளரை அரசு சாரா துறையில் கொண்டுள்ளது.

மேலும், தற்போது இஸ்ரேலில் முக்கிய சர்வதேச ஹைஃபா துறைமுகத்தை தனியார் மயமாக்குவதற்கான டெண்டரை பெற்றுள்ளதாகவும் அதானி தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இந்தியாவில் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள 5 ஜி அலைக்கற்றை ஏலத்திலும் அதானி குழுமம் பங்கேற்கவுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in