
வீட்டு உபயோகத்திற்காக சமையல் கியாஸ் விலை 50 ரூபாயும், வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் விலை 223 ரூபாயும் இன்று உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், மார்ச் 1-ம் தேதியான இன்று திடீரென விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன்படி 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் கியாஸ் விலை சென்னையில் ரூ.50 உயர்ந்து 1118.50 க்கு விற்பனையாகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த சிலிண்டர் விலை ரூ.1068.50 க்கு விற்பனையானது. வணிகப் பன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.223 உயர்ந்து ரூ.2,2268-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக உயர்ந்து வந்த கியாஸ் விலை, மேகாலயா உள்ளிட்ட சில மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து ஒரே நிலையில் நீடித்து வந்தது. தற்போது தேர்தல் முடிந்த நிலையில், கியாஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு நடுத்தரமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் கண்டத்தைத் தெரிவித்துள்ளனர். எண்ணெய் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.