ஹைதராபாத்தில் உள்ள ஒரு வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் இன்று ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை நான்கானது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள டோமல்குடா பகுதியில் உள்ள வால்மீகி நகர் ரோஸ் காலனியில் ஒரு வீட்டில் ஜூலை 11-ம் கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதில் அக்குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து காயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஜூலை 12-ம் தேதி ஷரண்யா(6) என்ற சிறுமி உயிரிழந்தார்.
இந்நிலையில் காயமடைந்த அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி பத்மா(53), தனலட்சுமி(28), அவரது மகன் அபினவ்(7) ஆகியோர் இன்று பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த விஹான் மேல் சிகிச்சைக்காக எக்செல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கியாஸ் சிலிண்டர் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.