கடைகளை அடித்து உடைத்து கஞ்சா கும்பல் அட்டகாசம்: வைரலாகும் காட்சிகள்

காவல்துறைக்கு டி.டி.வி.தினகரன் கண்டனம்
கடைகளை அடித்து உடைத்து கஞ்சா கும்பல் அட்டகாசம்: வைரலாகும் காட்சிகள்

சென்னையில் கஞ்சா போதையில் உணவகம், சலூன்கடைகளை இளைஞர்கள் அடித்து நொறுக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவங்களை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ட்விட் செய்துள்ளார்.

சென்னை பெரியமேடு எம்.வி பத்ரன் தெரு, பெரியண்ணன் மேஸ்திரி் தெருவில் தனியார் உணவகம் மற்றும் சலூன்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு உணவகத்திற்கு வாலிபர் ஒருவர் சாப்பிட வந்தார். அப்போது திடீரென அந்த உணவகத்திற்குள் புகுந்த கஞ்சா போதை கும்பல் ஒன்று வாலிபர் அன்சரை தாக்கியது. அத்துடன் உணவகத்திற்குள் இருந்த பொருட்களையும் அந்த கும்பல் தூக்கி எறிந்து அராஜகத்தில் ஈடுபட்டது. அதே கும்பல் அருகில் இருந்த சலூன் கடைக்குச் சென்று கடைமுன்பு இருந்த பேனரைக் கிழித்து அங்கிருந்த சிசிடிவி கேமராவை அடித்து நொறுக்கியது. மேலும் அவ்வழியாக வந்த பொதுமக்களை மிரட்டி தகராறில் ஈடுபட்டது. இதன் பின் அந்தக் கும்பல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

அவர்கள் தாக்கியதால் காயம்பட்ட அன்சர் இதுகுறித்து பெரியமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போதை ஆசாமிகள் அட்டூழியத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில்," சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் கடைகளை அடித்து நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகளைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது.. தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி கொடிகட்டிப்பறக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை இளைஞர்களை எந்த அளவுக்கு சீரழிக்கிறது என்பதற்கு இக்காட்சிகளே உதாரணம். வெறும் பேச்சளவில் மட்டுமின்றி போதைப் பொருள் ஓழிப்பை உண்மையான அக்கறையுடன் காவல்துறை செயல்படுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in