சென்னையில் சட்டவிரோதமாக சிம் பாக்ஸை பயன்படுத்திய கும்பல்: பயங்கரவாதிகளுடன் தொடர்பா என உளவுத்துறை விசாரணை

சென்னையில் சட்டவிரோதமாக சிம் பாக்ஸை பயன்படுத்திய கும்பல்: பயங்கரவாதிகளுடன் தொடர்பா என உளவுத்துறை விசாரணை

சென்னையில் சட்டவிரோதமாக சிம் பாக்ஸ் பயன்படுத்தி வெளிநாட்டு அழைப்புக்களை உள்ளூர் அழைப்புக்களாக மாற்றி மோசடியில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அமைந்தகரை எம்.எம் காலனி மற்றும் பி.பி தோட்டம் பகுதியில் இருந்து அதிகப்படியான வெளிநாட்டு அழைப்புகள் செல்வதாகவும், ஆனால் அவை உள்ளூர் அழைப்புகள் போல் காட்டுவதால் தங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை (ஐ.பி) அதிகாரிகளுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் ஐ.பி அதிகாரிகள் சென்னை அமைந்தகரை போலீஸாரின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு பூட்டியிருந்த வீட்டிலிருந்து 4 சிம் பாக்ஸ் மற்றும் 60-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் பறிமுதல் செய்தனர். அந்த வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்த போது ஜாகீர் ஹுசைன் என்பவர் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்ததாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஜாகீர் ஹுசைளைப் பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, பெரியமேடு பகுதியில் வசித்து வரும் தனது நண்பர்களுக்காக இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொடுத்ததாக ஜாகீர் ஹுசைன் தெரிவித்தார். இதையடுத்து ஊத்துக்காட்டான் தெருவில் வசித்து வந்த ஜாகீர் ஹுசைனின் நண்பர்களான சுனைத் மற்றும் ஷெரிஃப் ஆகிய இருவரை ஐ.பி அதிகாரிகள் பிடித்தனர். பின்னர் பிடிபட்ட மூன்று பேரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் ஒப்படைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே கோவை மற்றும் கர்நாடக மாநிலம் மங்களூர் ஆகிய இடங்களில் பயங்கரவாதிகளால் வெடிகுண்டு வெடிப்புச் சம்பவங்கள் அரங்கேறியுள்ள நிலையில், சென்னையில் பிடிபட்ட மூவரும் ஏதேனும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ளவர்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in