அரசு பேருந்தில் பெண்களைக் குறிவைத்து நகை திருடும் கும்பல்: அச்சத்தில் குமரி மாவட்ட பெண்கள்

குமரி மாவட்டத்தில் பேருந்தில் நகை திருட்டு
குமரி மாவட்டத்தில் பேருந்தில் நகை திருட்டுஅரசு பேருந்தில் பெண்களைக் குறிவைத்து நகை திருடும் கும்பல்: அச்சத்தில் குமரி மாவட்ட பெண்கள்

ஓடும் பேருந்துகளில் பெண்களைக் குறிவைத்து நகை திருட்டில் ஈடுபடும் கும்பலால் குமரி மாவட்ட மகளிர் அச்சத்தில் உள்ளனர். இன்று இரு பெண்களின் நகைகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவில் அருகே உள்ள அனந்தநாடார் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மெர்லின் ஜெயபால். இவரது மனைவி சுனிதா. முட்டம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் வேலைசெய்து வருகிறார். இன்று இவர் வழக்கம்போல் கல்லூரிக்கு அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். பேருந்தில் அதிகளவு கூட்டம் இருந்தது.

பேருந்து ராஜாக்கமங்கலம் பகுதி அருகே சென்று கொண்டு இருந்தபோது, சுனிதா கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயின் மாயமாகி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் அங்கேயே இறங்கி ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்மநபர் செயினைத் திருடியது குறித்து ராஜாக்கமங்கலம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல், குலசேகரம் அருகில் உள்ள முதலார் பகுதியைச் சேர்ந்தவர் அல்போன்சாள்(60). இவர் ஆலங்கோடு பகுதியில் உள்ள தன் உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு அரசுப்பேருந்தில் குலசேகரம் சென்று கொண்டிருந்தார். அழகிய மண்டபம் பகுதியில் வரும்போதுதான் அல்போன்சாள் தன் கழுத்தில் கிடந்த மூன்றுபவுன் செயின் மாயமாகி இருப்பதைப் பார்த்தார்.

இதுகுறித்து அல்போன்சாள் கொடுத்த புகாரின் பேரில், தக்கலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குமரியில் ஒரேநாளில் வெவ்வேறு வழித்தடங்களில் இரு பெண்களிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in