பொதுமக்களை பட்டாக் கத்திகளுடன் துரத்திய ரவுடிக்கும்பல்: வைரலாகும் சிசிடிவியால் சென்னையில் பரபரப்பு

பொதுமக்களை  பட்டாக் கத்திகளுடன் துரத்திய  ரவுடிக்கும்பல்: வைரலாகும் சிசிடிவியால் சென்னையில் பரபரப்பு

நள்ளிரவில் கடையில் ஜூஸ் கேட்டுத் தராத ஆத்திரத்தில் சென்னையில் பட்டாக்கத்தியுடன் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை வெட்டுவதற்காக ரவுடிக்கும்பல் விரட்டிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

சென்னை அண்ணா நகர் கியூ-பிளாக் 4-வது பிரதான சாலை பகுதியில் நேற்றிரவு ரவுடி கும்பல் கஞ்சா போதையில் பட்டாக்கத்தியுடன் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியதுடன் நடந்து சென்ற பொதுமக்களை வெட்டுவதற்காக துரத்திச் சென்றனர். இதனால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து அண்ணா நகர் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியதில் அப்பகுதியில் உள்ள ஜூஸ் மற்றும் டீ கடைக்கு நேற்றிரவு 11.30 மணிக்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் சென்றது. அக்கடையில் ஜூஸ் கேட்டுள்ளனர். கடையை மூட உள்ளாதால் ஜூஸ் தீர்ந்து விட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி கும்பல் கஞ்சா போதையில் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து பொதுமக்களை அச்சுறுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும், அந்த ரவுடிக் கும்பல் அவ்வழியாக சாலையில் நடந்து வந்த பொதுமக்களை பட்டாக்கத்தியுடன் விரட்ட துரத்திச் சென்றதுடன் வாகன ஓட்டிகளையும் வெட்ட முற்பட்டதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்..பின்னர் ஜூஸ் கடையின் எதிரே உள்ள வீட்டினுள் நுழைந்த கஞ்சா போதைக்கும்பல், அங்கிருந்த காரின் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனர். பின்னர் ஜூஸ் கடை ஊழியரைப் பட்டாக்கத்தியால் தாக்கி அவரது செல்போனையும் பறித்துக்கொண்டு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

நீதிபதிகள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்புகள் உள்ள பகுதியில் ரவுடி கும்பல் பட்டாக் கத்தியுடன் வந்து அட்டகாசத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அண்ணா நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரவுடி கும்பலைத் தேடி வருகின்றனர். மேலும், அந்த ரவுடி கும்பல் இருசக்கர வாகனத்தைத் திருடிச் செல்லும் போது அண்ணா நகர் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் அந்த வாகனத்தை துரத்திச் சென்றுள்ளனர். இதனால் அந்த கும்பல் திருவள்ளூர் சோழவரம் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்று விட்டதாகவும், அவர்கள் திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in