
கோழிக்கோட்டில் நர்சிங் கல்லூரி மாணவிக்கு மது குடிக்க வற்புறுத்தி, அவரது நண்பர்கள் இருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, கோழிக்கோட்டில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில், அவரது ஆண் நண்பர்கள் இருவர் தங்கள் வாடகை வீட்டிற்கு மாணவியை நேற்று முன்தினம் அழைத்துள்ளனர். அங்கு சென்ற மாணவியை மது குடிக்க வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அவர் அதற்கு மறுத்துள்ளார். ஆனால், கட்டாயப்படுத்தி மாணவியை, அவர்கள் இருவரும் மதுவைக் குடிக்க வைத்தனர்.
இதன் பின் போதையில் இருந்த மாணவியை, அந்த ஆண் நண்பர்கள் இருவரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். மறுநாள் நினைவு திரும்பிய மாணவி, தனது தோழியை அழைத்து நடந்தவற்றைக் கூறியுள்ளார். இந்த நிலையில், அவரது ஆண் நண்பர்கள் இருவரும், அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். ஒருவர் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் எர்ணாகுளத்தில் வசிக்கும் மாணவர் என்றும் கூறப்படுகிறது.
நேற்று கல்லூரிக்கு வந்த மாணவியின் நடவடிக்கையில் மாற்றத்தைக் கண்ட கல்லூரி நிர்வாகம், அவரிடம் விசாரித்த போது, இரண்டு நண்பர்களால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விஷயம் தெரிய வந்தது. இதனால் கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது. இதையடுத்து உடனடியாக கோழிக்கோடு கசாபா போலீஸில் மாணவி புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு இளைஞர்களையும் போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது கோழிக்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.