
போலி நகைகளை அடகு வைத்தும், விற்றும் மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலையும், அதற்கு உடந்தையாக இருந்த முன்னாள் காவல் உதவி ஆய்வாளரையும் காரைக்கால் போலீஸார் கைது செய்துள்ளனர்.
காரைக்கால் ராஜாத்தி நகரைச் சேர்ந்த கைலாஷ் என்பவர், பெரமசாமிப் பிள்ளை வீதி நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த சிலர் தங்கள் நகைகளை விற்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அந்த நகைகளைப் பரிசோதித்த போது அவை போலியானவை என்று தெரிய வந்தது. அதையடுத்து அவர் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், நகையை விற்க வந்த காரைக்கால் சின்னக்கண்ணு செட்டித் தெருவைச் சேர்ந்த பரசுராமன்(30), போலி நகையை கொடுத்தனுப்பி விற்கச் சொன்ன திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரத்தைச் சேர்ந்த ரிபாத் காமில்(31) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
போலீஸார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் ஏற்கெனவே மோசடி வழக்கு ஒன்றில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ஜெரோம் ஜேம்ஸ்பாண்ட், அவரது நண்பர் புவனேஸ்வரி ஆகியோர் இதற்கு உடந்தையாக இருந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து ஜெரோம் ஜேம்ஸ்பாண்டை நேற்று போலீஸார் கைது செய்தனர். புவனேஸ்வரியை தேடி வருகின்றனர்.
மேலும் இதுதொடர்பாக காரைக்கால் புதுத்துறையைச் சேர்ந்த மொய்தீன் (31), திருமலைராயன்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(35) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே காரைக்காலில் உள்ள புதுவை பாரதியார் கிராம வங்கியில் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பில் போலிநகை அடகு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று முன் தினம் வங்கி நிர்வாகம் சார்பில் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இச்சம்பவத்திலும் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு தொடர்பு இருப்பது போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இவர்கள் காரைக்கால் மட்டுமின்றி புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளில் அடகுக் கடைகள், வங்கிகளில் போலி நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கான ரூபாய் பெற்றிருப்பதாக போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் காரைக்காலில் உள்ள அடகுக்கடைகள் மற்றும் வங்கி நிர்வாகத்தினரிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.