
ஆண்டிபட்டி வைகை அணை மீன்வளத்துறை அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கண்மாயில் முத்துப்பாண்டி என்பவர் 2021-2022-ம் ஆண்டுக்கான மீன்பாசி குத்தகை எடுத்தார். ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து, 2022-2023 ஆண்டுக்கான மீன்பாசி குத்தகை பழனி முருகன் என்பவருக்கு விடப்பட்டது.
இந்தநிலையில், தாமரைக்குளம் கண்மாயில் இருந்த தனது மீன்பிடி சாதனங்களை முத்துப்பாண்டி அகற்றாமல் இருந்தார். இதனையடுத்து தாமரைக்குளம் கண்மாய்க்கு வைகை அணை மீன்வளத்துறை அலுவலக பணியாளர்களுடன் மீன்வள ஆய்வாளர் கவுதமன் சென்றார்.
முத்துப்பாண்டியிடம் அவரது மீன்பிடி சாதனங்களை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி உள்பட சிலர், மீன்வள ஆய்வாளர் கவுதமனை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டல் விடுத்தனர்.
தன்னை பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸில் கவுதமன் புகார் கொடுத்தார். இதன்படி முத்துப்பாண்டி உள்பட 7 பேர் மீது தென்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.