போலி ஆவணம் மூலம் அடுத்தவர் நிலத்தை பதிவுசெய்ய வந்த கும்பல்: சார்பதிவாளர் காட்டிய அதிரடி

பத்திரம்
பத்திரம்

செங்கோட்டையில் போலி பத்திரங்கள் மூலம் அடுத்தவர் நிலத்தை பதிவு செய்ய முயன்ற கும்பலை சார்பதிவாளர்கள் கையும், களவுமாகப் பிடித்தார். இதனைத் தொடர்ந்து இந்தக் கும்பல் மீது செங்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகில் உள்ளது பண்பொழியில் சார்பதிவாளர் அலுவலகம். இங்கு நேற்று காலையில் பத்திரப் பதிவுக்கு டோக்கன் பெற்று, மதியத்திற்கு மேல் பதிவு செய்ய ஒரு கும்பல் வந்தது. அப்போது அந்த மர்ம கும்பல் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யவந்தது தெரியவந்தது.

இதுகுறித்து காவலர்கள் தெரிவிக்கையில், “மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கண்பதி என்பவருக்கு சொந்தமாக நிலம் உள்ளது. கண்பதி இறந்துவிட்டார். இந்நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த பள்ளிக்கூடம் தெருவில் வசிக்கும் சேகர் முருகன் என்ற ஷபிபுல்லா(41) தனக்குச் சொந்தமான சொத்து எனச் சொல்லி போலி ஆவணங்கள் மூலம் செல்லம் என்பவருக்கு பத்திரப் பதிவு செய்யமுயன்றார்.

பத்திர எழுத்தர் அழகுதுரை இதற்கென போலிப் பத்திரம் தயாரித்துக் கொடுத்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகசாமி, முத்துகுமார் ஆகியோர் இதில் சாட்சிக் கையெழுத்திட வந்தனர். அப்போது இந்தக் கும்பலின் கருவிழி, கைரேகை, ஆதார் எண் ஆகியவை சோதனை செய்யப்பட்டது. அப்போது இறந்து போன கண்பதியின் சொத்தை, ஷபிபுல்லா போலி ஆவணம் மூலம் விற்க முயன்றிருப்பது ஆதார் எண்ணின் அடிப்படையில் தெரியவந்தது. இதேபோல் ஷபிபுல்லா வைத்த கைரேகையும் இதில் முக்கிய சாட்சியாக இருந்தது.

இதுகுறித்து பண்பொழி சார்பதிவாளர் கொடுத்த புகாரின் பேரில் செங்கோட்டை போலீஸார் ஷபிபுல்லா, செல்லம், ஆறுமுகசாமி, முத்துக்குமார், அழகுதுரை ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in