ஓரினச் சேர்க்கை செயலியால் வந்த விபரீதம்: பணம், நகையை இழந்த ஆண் நர்ஸ்

ஓரினச் சேர்க்கை செயலியால் வந்த விபரீதம்: பணம், நகையை இழந்த ஆண் நர்ஸ்

ஓரினச் சேர்க்கை ஆப் மூலம் நண்பரை சந்திக்க சென்ற ஆண் நர்சை மிரட்டி வழிப்பறி செய்து பத்தாயிரம் பணம்,  ஒரு பவுன் நகை உள்ளிட்டவற்றை வழிப்பறி செய்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை சரவணம்பட்டியை சேர்ந்த 33 வயது வாலிபர் ஒருவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார். இவருக்கு ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் கிரைண்டர் ஆப் மூலம் ராக்கி என்பவர் அறிமுகமானார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இதனிடையே 2 பேரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். 

இதையடுத்து கோவை சரவணம்பட்டியில் நேரில் சந்தித்த இருவரும், துடியலூர் ரோட்டில் சென்று அங்குள்ள தனியார் பள்ளி அருகே நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த மூன்று வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஆண் நர்சிடம் இருந்த ஒரு பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு செல்போனை பறித்தனர். 

இதுகுறித்து  ஆண் நர்ஸ் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸாருக்கு ராக்கி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து  ராக்கியிடம்  முறையாக தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அதிர்ச்சி தரும் உண்மைகள் தெரிய வந்தன. 

அவரது பெயர் ராக்கி இல்லை, அவர் தூத்துக்குடியைச் சேர்ந்த கார்த்திகேயன் (27) என்பதும்,  தனது நண்பர்கள் நெல்லையை சேர்ந்த மாரிசெல்வம் (23), திருச்சியை சேர்ந்த அபிராம் (19), கொடைக்கானலை சேர்ந்த ஹரிவிஷ்னு (21) ஆகியோருடன் இணைந்து திட்டமிட்டு ஆண் நர்சிடம் வழிப்பறி செய்திருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து கார்த்திகேனை கைது செய்த போலீஸார் அவர் அளித்த தகவலை வைத்து மாரிசெல்வம், அபிராம், ஹரிவிஷ்னு ஆகியோரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in