‘ராகுல் போட்டியிட்டால் வரவேற்போம்; ஆனால்...’ - காங்கிரஸ் தலைவர் தேர்தல் விஷயத்தில் கறார் காட்டும் ஜி-23 தலைவர்கள்!

பிருத்விராஜ் சவான்
பிருத்விராஜ் சவான்

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரத் தலைவரைத் தேர்ந்தெடுக்க அக்டோபர் 17-ல் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், புதிய தலைவர் என்ன செய்ய வேண்டும் என ஜி-23 தலைவர்கள் தங்கள் எதிர்பார்ப்பைப் பதிவுசெய்திருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியில் உட்கட்சித் தலைவர் தேர்தல் நடத்த வேண்டும்; முழு நேரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு 2020-ல் கடிதம் எழுதிய 23 காங்கிரஸ் தலைவர்கள் ஜி-23 தலைவர்கள் என அழைக்கப்படுகின்றனர். அந்தக் கடிதம் ஊடகங்களில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலை நடத்த கட்சித் தலைமை முடிவெடுத்ததற்கு ஜி-23 தலைவர்கள் கொடுத்த அழுத்தமும் ஒரு காரணம்.

இந்தத் தேர்தலில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுகிறார். அவருக்கு சோனியா காந்தி குடும்பம் ஆதரவளிக்கிறது, ஜி-23 தலைவர்களில் ஒருவரான சசி தரூர் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார். இக்குழுவைச் சேர்ந்த மணீஷ் திவாரியும் போட்டியிடவிருக்கிறார். இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இருக்கும் ராகுல் காந்தி, இந்தத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என மூத்த தலைவர்களிடம் உறுதியாகக் கூறிவிட்டார்.

இந்நிலையில், அக்குழுவின் முக்கியத் தலைவரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவான் காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து ஊடகங்களிடம் பேசியிருக்கிறார். “முழு நேரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனும் எங்கள் நிபந்தனை ஒருவழியாக நிறைவேறுகிறது. ஆனால், புதிய் தலைவர் பகுதி நேரத் தலைவராக இருக்கக்கூடாது. மக்களிடம் மனம் திறந்து பேசுபவராக இருக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

“ஏதேனும் பிரச்சினை என்றால், ஜனநாயக ரீதியில் நாங்கள் குரல் எழுப்புவோம். மாநில காங்கிரஸ் கட்சியினர் தங்கள் தலைவர்களை சோனியா நியமிக்க வேண்டும் என்றும், ராகுல் காந்தி தலைவராக மீண்டும் பதவியேற்க வேண்டும் என்றும் விரும்புவதாகத் தெரிகிறது. அதெல்லாம் தேவையில்லை. அதற்குப் பதிலாகத் தேர்தல் முறையைப் பலப்படுத்தலாம்” என்று கூறிய பிருத்விராஜ், “இன்றுகூட ராகுல் போட்டியிட விரும்பினால், அவர் வேட்புமனுவைப் பூர்த்தி செய்தால் நாங்கள் வரவேற்போம். ஆனால், அவர் அதில் தெளிவான முடிவெடுத்துவிட்டார். இவ்விஷயத்தில் அவர் நாடகமாடுவதாகச் சிலர் சொல்வது ஏன் என எனக்குத் தெரியவில்லை. நாங்கள் ஒரு குடும்பத்துக்கு எதிரானவர்கள் அல்ல. அப்படிச் செய்வது அறிவீனம்” என்று கூறினார்.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் அசோக் கெலாட், ராஜஸ்தான் முதல்வர் பதவியை விட்டுத்தர மறுக்கிறார். அசோக் கெலாட், ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுடனான மோதலை இன்னமும் தொடர்கிறார். தனக்குப் பிறகு முதல்வர் பதவி ராஜஸ்தான் தேர்தல் பொறுப்பாளர் அஜய் மாக்கனுக்கு வழங்கப்பட வேண்டும் என்று சோனியா காந்தியிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அதுகுறித்துப் பேசிய பிருத்விராஜ், “அசோக் கெலாட் ஒரு மூத்த தலைவர். நல்லவர். அவரை ஆதரிப்பதா வேண்டாமா என நாங்கள் இன்னமும் முடிவுசெய்யவில்லை. ஆனால், அவர் இரண்டு பதவிகளையும் வகிக்க விரும்பினால் அதை எதிர்ப்போம். காங்கிரஸ் தலைவர் பதவி என்ன பகுதிநேர வேலையா? முதல்வர் பதவியும் பகுதி நேர வேலையா என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “அசோக் கெலாட் இரண்டு மூன்று மாதங்கள் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்துவிட்டு, ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைப் பயணத்தை முடித்துக்கொண்டுவந்ததும், அவரிடம் தலைவர் பதவியை ஒப்படைக்கலாம் என நினைத்திருக்கலாம். ஆனால், அதெல்லாம் முடிந்துபோன கதை” என்று பிருத்விராஜ் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in