பயங்கரவாதிகளுக்கு நிதி: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை!

பயங்கரவாதிகளுக்கு நிதி: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை!

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் மற்றும் கேரளா என 60க்கும் மேற்பட்ட இடங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளுக்கு தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைமை அலுவலகம், அதேபோல மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டு நிதி திரட்டி வருவதாகவும், இளைஞர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தி மூளைச்சலவை செய்து பயங்கரவாத செயலுக்கு உட்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகங்களில் சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து இதில் தொடர்புடைய 4 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக கேரளா மற்றும் தமிழகத்தில் சோதனை நடத்துவதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் அமைப்பை சார்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பாதுகாப்பிற்காக சி.ஆர்.பி.எப் வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சோதனையில் இதுவரை 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அழைத்து சென்று என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனையின் முடிவிலேயே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் முழுமையான விவரங்கள் தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in