கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு போராட்டம்... பெங்களூருவில் 144 தடை உத்தரவு!

கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு போராட்டம்... பெங்களூருவில் 144 தடை உத்தரவு!

பெங்களூருவில் இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் திறப்பு உத்தரவை கண்டித்து நாளை கர்நாடகா முழுவதும் பந்த் நடைபெறவுள்ள நிலையில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்திற்கு 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. கன்னட அமைப்புகள் நாளை மாநிலம் தழுவிய பந்த்துக்கு அறிவிப்பு விடுத்துள்ளன.

டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த காவிரி ஒழுங்காற்று குழுவின் 87வது கூட்டத்தில், ‘‘த‌மிழகத்தின் குறுவை சாகுபடிக்காக கர்நாடக அரசு அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் விநாடிக்கு 3000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும். அதாவது செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்துக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும்'' என பரிந்துரை செய்யப்பட்டது.

கர்நாடகா பந்த்
கர்நாடகா பந்த்

இதற்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை கண்டித்து விவசாய சங்கத்தினர் மண்டியா, மைசூரு, பெங்களூரு ஆகிய இடங்களில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் முதல்வர் சித்தராமையா, ‘‘காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட இருக்கிறோம்'' என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ், ‘‘தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக அரசை கண்டித்தும் நாளை கர்நாடகா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்’’ என்றார். இதற்கு கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு, கர்நாடக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, கர்நாடக திரைப்பட வர்த்தக கூட்டமைப்பு, தனியார் வாகன உரிமையாளர்கள் சங்கம் உட்பட 150க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மாண்டியாவில் முழு அடைப்பு போராட்டம்
மாண்டியாவில் முழு அடைப்பு போராட்டம்

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர‌ கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதில் தமிழக அரசு தரப்பில், குறுவை சாகுபடிக்கு கூடுதலாக நீரை திறந்துவிடுமாறு கோரப்படும் என தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in