இரவில் சிதைக்கப்பட்ட பழ வியாபாரியின் முகம்: வாடிப்பட்டியில் மர்ம நபர்கள் வெறிச்செயல்

இரவில் சிதைக்கப்பட்ட பழ வியாபாரியின் முகம்: வாடிப்பட்டியில் மர்ம நபர்கள் வெறிச்செயல்

வாடிப்பட்டியைச் சேர்ந்த சாலையோர கொய்யாப்பழ வியாபாரி குத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி யூனியன் ஆபிஸ் காலனியைச் சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் முருகன்(47). சாலையோரத்தில் கொய்யாப்பழம் விற்பனை செய்து வந்தார். இவர் நேற்று இரவு 9.30 மணி அளவில் தாதம்பட்டி அரசு கால்நடை மருத்துவமனை அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அங்கே வந்த மர்ம நபர்கள் சிலர் முருகனின் முகத்தில் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் மற்றும் வாடிப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர். மேலும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இக்கொலை சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக மூன்று தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இன்று காலை முருகனின் உறவினர்கள் கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், கொலையாளிகள் யார்? கள்ளத்தொடர்பு காரணமாக இக்கொலை செய்யப்பட்டாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in