தங்க செயினை திரும்ப கேட்ட வாலிபர்; அடித்துக் கொன்ற நண்பர்கள்; போதையால் நடந்த விபரீதம்

தங்க செயினை திரும்ப கேட்ட வாலிபர்; அடித்துக் கொன்ற நண்பர்கள்; போதையால் நடந்த விபரீதம்

பரமக்குடி அருகே குடிபோதையில் காய்கறி வியாபாரியை பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்த நண்பர்களிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கல்லணியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் கண்ணன் (32). காய்கறி வியாபாரம் செய்து வந்தார். திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவரும், நண்பர்கள் இண்டு பேரும் சேர்ந்து பரமக்குடி ஜீவா நகர் சுடுகாடு சர்வீஸ் ரோடு பகுதியில் நேற்றிரவு அமர்ந்து மது குடித்தனர். போதை அதிகமான நிலையில், தனது நண்பர்களுடன் கொடுத்திருந்த ஒன்றரை பவுன் செயினை திரும்ப தருமாறு கண்ணன் கேட்டுள்ளார். இதில் 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த இளையான்குடி ராதாபுளி பகுதியைச் சேர்ந்த விஜயராஜ், பேக்கரி மாஸ்டர் தர்மசாஸ்தா ஆகியோர் பீர் பாட்டிலால் கண்ணன் தலையில் ஓங்கி அடித்துள்ளனர். மயங்கி விழுந்த அவரை தூக்கி பார்த்துவிட்டு போதையில் செய்வதறியாமல் கண்ணனை அந்த இடத்திலேயே விட்டுச் சென்றனர்.

இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் தகவல்படி எமனேஸ்வரம் போலீஸார் சம்பவ இடம் சென்று கண்ணன் உடலை கைப்பற்றினர். அந்த இடத்தில் கேட்பாரற்று நின்ற பதிவெண் இல்லாத இரு சக்கர வாகனத்தை மீட்டனர். பரமக்குடி டவுன் போலீஸார் மோப்ப நாயுடன் மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த தடயங்கள் படி விஜயராஜ், தர்மசாஸ்தா ஆகிய இருவரும் சிக்கினர். இவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in