
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கால்வாயில் பிடித்துத் தள்ளி நண்பர்களே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், செருப்பலூர் அரமன்னம் பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டின்(46). கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்த இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. குடிப்பழக்கம் கொண்ட இவருக்கு இரும்புலி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்(32), திருவரம்பு பகுதியைச் சேர்ந்த செல்வன்(32) ஆகியோர் நண்பர்களாகினர். இவர்கள் மூவரும் சேர்ந்து அவ்வப்போது மதுகுடிப்பது வழக்கம்.
அதேபோல் ராஜேஷ், செல்வன் இருவரும் ஜஸ்டின் வீட்டில் இருந்து குடித்துக்கொண்டு இருந்தபோது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. அதில் ஜஸ்டினை இருவரும் சேர்ந்து அவரது வீட்டின் பின்னால் இருந்த கால்வாயில் பிடித்துத் தள்ளினர். இதில் ஜஸ்டினின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் ஜஸ்டினை மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு ஜஸ்டின் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதனைத் தொடர்ந்து ஏற்கனவே கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த ராஜேஷ், செல்வன் இருவர் மீதும் குலசேகரம் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். தொழிலாளியை அவரது நண்பர்களே கால்வாயில் பிடித்துத் தள்ளிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.