`தங்கையின் காதலுக்கு நண்பன் உதவியதால் கடத்திக் கொலை செய்தேன்'- வாலிபர் அதிர்ச்சி வாக்குமூலம்!

`தங்கையின் காதலுக்கு நண்பன் உதவியதால் கடத்திக் கொலை செய்தேன்'- வாலிபர் அதிர்ச்சி வாக்குமூலம்!

மதுரை அவனியாபுரத்தில் மாயமான இளைஞர் கோவில்பட்டி அருகே கொலை செய்யப்பட்ட நிலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். காதல் விவகாரத்தில் நண்பனை, நண்பர்களே கடத்தி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மதுரை அவனியாபுரம் அருகே உள்ள எம்.எம். காலனியைச் சேர்ந்தவர் வெற்றிவேல்(19). கடந்த 5-ம் தேதி வெற்றிவேலைக் காணவில்லை என தாய் ராணி அவனியாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், அவனியாபுரத்தைச் சேர்ந்த வெற்றிவேலின் நண்பர்கள் அஜய் முருகன் (19) மற்றும் மணிகண்டன்(19). இருவரும் வெற்றிவேலை, கடந்த 30-ம் தேதி அஜய் முருகனின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வெள்ளாளங்கோட்டை கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, ஊருக்கு வெளியேயுள்ள காட்டுப்பகுதியில் பாழடைந்த கிணற்றுக்கு அருகில் வைத்து வெற்றிவேலை அரிவாளால் வெட்டி, கிணற்றுக்குள் தூக்கி வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, அவனியாபுரம் காவல்துறையினர் கொலையாளிகளை இன்று சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று, வெற்றிவேல் உடலை கிணற்றிலிருந்து வெளியே எடுத்தனர்.

தொடர்ந்து, அஜய்யிடம் மேற்கொள்ளப்பட்ட கூடுதல் விசாரணையில், தனது தங்கையை வெற்றிவேலின் நண்பர் ஒருவர் காதலிக்க வெற்றிவேல் உதவியதாகவும், இதன் காரணமாகவே அவரை கடத்தி வந்து கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அவரது உடல் உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காதல் விவகாரத்தில் நண்பனை கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in