சாலைவிபத்தில் சிக்கிய நண்பர்: மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி விட்டு பின்தொடர்ந்த வாலிபர் பலி

சாலைவிபத்தில் சிக்கிய நண்பர்: மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி விட்டு பின்தொடர்ந்த வாலிபர் பலி

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறையில் தன் நண்பன் விபத்தில் சிக்கியது தெரிந்து அவரை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸின் பின்னால் சென்ற வாலிபர் வாகன விபத்தில் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை வேப்புமூட்டுவிளையைச் சேர்ந்தவர் பிரின்ஸ்குமார். இவரது மகன் ஜெபின் ஜார்ஜ்(21) இவர் கேரள மாநிலம், பாறசாலையில் உள்ள சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்தார்.

இவர் நேற்றுமாலை கடம்பமூடு பகுதியில் வந்துகொண்டிருந்தார். அப்போது சாலையோரம் நின்றுகொண்டிருந்த டூவீலரில் எதிர்பாராதவிதமாக மோதினார். இதில் ஜெபின் ஜார்ஜ் காயம் அடைந்தார். இந்த செய்தி அவரது நண்பரான பேச்சிப்பாறை காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த அஜினிக்கு(21) தெரியவந்தது. அவர் தன் நண்பரான விஜினையும்(20) அழைத்துக்கொண்டு விபத்து நடந்த பகுதிக்கு பைக்கில் சென்றார்.

அவர்கள் ஜெபின் ஜார்ஜை ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பிவிட்டு பின்னாலேயே பைக்கில் சென்றனர். அஜின் பைக்கை ஓட்டிச் சென்றார். மணியன்குழி பகுதியில் பைக் சென்றபோது, எதிரேவந்த செல்வகுமார் என்பவர் ஓட்டிவந்த பைக் இவர்கள் மீது மோதியது. இதில் பைக்கை ஓட்டிவந்த செல்வகுமார், மற்றொரு பைக்கை ஓட்டிவந்த அஜின், அவரது பின் சீட்டில் இருந்த விஜின் மூவருமே தூக்கிவீசப்பட்டனர். அக்கம், பக்கத்தினர் மீட்டு இவர்களை மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் அஜின் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சென்னையில் ஹோட்டல் ஒன்றில் அஜின் வேலைசெய்து கொண்டிருந்தார். பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார்.

நண்பர் விபத்துக்குள்ளானது தெரிந்து அவரைப் பார்க்கச் சென்ற வாலிபர், சாலைவிபத்தில் உயிர் இழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in