75 அசையா சொத்துகள் முடக்கம்: சுரானா நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

75 அசையா சொத்துகள் முடக்கம்: சுரானா நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னையை சேர்ந்த சுரானா நிறுவனத்துக்குச் சொந்தமான 67 காற்றாலை உட்பட 113.32 கோடி மதிப்புடைய 75 அசையா சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட்' நிறுவனம், 'சுரானா பவர் லிமிடெட்' மற்றும் 'சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட்' ஆகியவை ஐ.டி.பி.ஐ, எஸ்.பி.ஐ வங்கியிடமிருந்து 3,986 கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் கடனாக 1,301.76 கோடி ரூபாயை ஐ.டி.பி.ஐ வங்கியில் இருந்தும், சுரானா பவர் லிமிடெட் 1,495.76 கோடி ரூபாயை ஐ.டி.பி.ஐ வங்கியில் இருந்தும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் 1,188.56 கோடி ரூபாய் எஸ்.பி.ஐ வங்கியில் இருந்தும் கடன் பெற்று, இந்த கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக, அந்த நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த கடன் தொகையை வைத்து சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா மற்றும் நிறுவன ஊழியர்கள் ஆனந்த், பிரபாகரன் ஆகியோர் மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை கடந்த மாதம் 12-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சுரானா நிறுவனத்துக்குச் சொந்தமான 67 காற்றாலை உட்பட 113.32 கோடி மதிப்புடைய 75 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி நடவடிக்கை மேற்கொண்டனர். ஏற்கெனவே கடந்த 2012-ம் ஆண்டு சட்ட விரோத தங்க ஏற்றுமதி விவகாரத்தில் சி.பி.ஐ நடத்திய சோதனையில் 400 கிலோ தங்கம் சிக்கியது. பின்னர் சி.பி.ஐ கட்டுப்பாட்டில் சீலிடப்பட்டு வைக்கப்பட்டிருந்த அந்த தங்கத்தில் 103 கிலோ தங்கம் மாயமானது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் 1,500 கிலோ இறக்குமதி தங்கத்திற்கு முறையான ஆவணங்கள் அளிக்கப்படவில்லை எனக்கூறி சுரானா நிறுவனத்தின் பெயர் இவ்வழக்கில் அடிப்பட்டது. அந்த வழக்கிலும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேபோல 250 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி மோசடி வழக்கிலும் சுரானா நிறுவனம் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in