நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி; குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியீடு: தகவல் அளித்தால் தக்க சன்மானம்

நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி;  குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியீடு: தகவல் அளித்தால் தக்க சன்மானம்

தமிழகம் முழுவதும் நிதி நிறுவனம் நடத்திய கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவானர்களின் புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர். இவர்கள் குறித்து தகவல் அளித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் பலர் பொதுமக்களிடம் பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சென்னையைத் தலைமையிடமாக செயல்பட்ட ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம், எல்என்எஸ் இண்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் நிறுவனம் மற்றும் ஹிஜாவு அசோசியேட் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் ஆகிய நிதி நிறுவனங்கள் அடங்கும்.

இந்த நிறுவனங்கள் பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்தில் சுமார் 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை வட்டியாக வழங்குவதாக அறிவித்து, பொதுமக்களிடம் இருந்து பணத்தைப் பெறுவதற்காக முகவர்கள் மற்றும் ஊழியர்களை நியமனம் செய்தது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆடம்பர நட்சத்திர விடுதிகளில் கூட்டங்கள் நடத்தி ஆசை வார்த்தைகளால் மக்களை ஈர்த்து கோடிக் கணக்கில் பணத்தைப் பெற்று வட்டியும், அசலும் தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளன.

இந்த மோசடி நிறுவனங்கள் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் சென்னை பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் மோசடி தொடர்பான புகாரில் கடந்த மே 20-ம் தேதி சென்னை பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்நிறுவனத்துக்குச் சொந்தமான 37 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆருத்ரா நிறுவன மோசடி தொடர்பான வழக்கு விசாரணையில் திரட்டப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 255 பொதுமக்கள் அந்நிறுவனத்தில் 2438 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இவ்வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் தலைமறைவாக உள்ளனர்.

இதே போல எல்என்எஸ் இண்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் என்ற நிதி நிறுவனத்தின் மீதான மோசடி புகார்களின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்நிறுவனம் தொடர்புடைய 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதுவரை திரட்டப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சுமார் 1 லட்சம் பொதுமக்கள் இந்நிறுவனத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளதாகவும், இவ்வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகள் 4 பேர் தலைமறைவாக உள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல் ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையிலும் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவால் நவம்பர் 8-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துடன் அந்நிறுவனத்திற்குச் சொந்தமான 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் 4 ஆயிரத்து 500 பொதுமக்கள் சுமார் 600 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் புகார்கள் வந்து கொண்டிருப்பதால் முதலீட்டாளர்கள் மற்றும் முதலீடு செய்த தொகையின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.. இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 2 முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாகி உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த மூன்று பெரிய நிதி நிறுவன மோசடிகள் தொடர்பாக மேற்கொண்டு புகார் அளிக்க தனித்தனியாக மின்னஞ்சல் முகவரிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று மோசடி வழக்குகளிலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளின் புகைப்படங்களை தமிழக காவல்துறையால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

போலீஸார் வெளியிட்டுள்ள தலைமறைவு குற்றவாளிகளின் புகைப்படங்கள்
போலீஸார் வெளியிட்டுள்ள தலைமறைவு குற்றவாளிகளின் புகைப்படங்கள்

மேலும், தலைமறைவு குற்றவாளிகள் குறித்து தகவல்கள் தெரிந்த பொதுமக்கள் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளரை அணுகி தகவல் தெரிவிக்குமாறு தமிழக காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், பொதுமக்கள் அளிக்கும் தகவல் உறுதியானதாக இருப்பின் அவர்களுக்கு தக்க சன்மானமும், ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் தமிழக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in