சினிமா வாய்ப்பு தருவதாக ஆசை; 17 பவுன் நகையை இழந்த இளம்பெண்: முகநூல் நண்பரால் நடந்த சோகம்

சினிமா வாய்ப்பு தருவதாக ஆசை;  17 பவுன் நகையை இழந்த இளம்பெண்: முகநூல் நண்பரால் நடந்த சோகம்

திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாக இளம் பெண்ணிடம் ஏமாற்றி 17 பவுன் நகையை மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் இம்மானுவேல் ராஜா(35). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். இதனிடையே, முகநூலில் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரோடு இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது அந்தப் பெண்ணிடம் தன்னை திரைப்பட இயக்குநராக அறிமுகம் செய்துகொண்ட இம்மானுவேல் ராஜா, அந்த பெண்ணுக்கும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகச் சொன்னார்.

இதை நம்பிய அந்த பெண்ணிடம் சினிமாவில் வாய்ப்பிற்கு பணம் கொடுக்க வேண்டும் எனவும் சொன்னார். இதையும் நம்பிய அந்தப் பெண் தன் வீட்டில் இருந்த 17 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு பாளையங்கோட்டை பேருந்து நிலையத்திற்கு வந்தார். அங்கு வந்து இம்மானுவேல் ராஜா நகைகளைப் பெற்றுக் கொண்டார்.

ஆனால் அதன் பின்பு அந்தப் பெண் தொடர்பு கொண்டபோது இம்மானுவேல் ராஜா போனை எடுக்கவில்லை. அதன் பின்பே அந்தப் பெண்ணுக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்தப்பெண், இதுகுறித்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதித்து இயக்குநர் என ஏமாற்றி நகையைப் பறித்த இம்மானுவேல் ராஜாவைக் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in