இயற்கை உரம் என்ற பெயரில் களிமண் விற்பனை; கோவில்பட்டி விவசாயிகள் அதிர்ச்சி: கும்பல் தலைமறைவு

இயற்கை உரம் என்ற பெயரில் களிமண் விற்பனை; கோவில்பட்டி விவசாயிகள் அதிர்ச்சி: கும்பல் தலைமறைவு

கோவில்பட்டியில் இயற்கை உரம் என்னும் பெயரில் விவசாயிகளுக்கு ஒரு கும்பல் களிமண்ணைக் கொடுத்து ஏமாற்றியிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதிகளில் அதிகளவில் மானாவாரி விவசாயம் நடக்கிறது. இங்கு வயல் தயாரிப்பின் போது அடி உரமாக டிஏபி என்னும் ரசாயன உரத்தை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் டிஏபிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி ஒரு மர்மக் கும்பல் டிஏபிக்கு இணையான இயற்கை உரம் எனச் சொல்லி உர மூட்டையை விற்பனை செய்தனர். இந்த இயற்கை உரங்கள் 50 கிலோ மூட்டையாக இருந்தது. 50 கிலோ மூட்டைக்கு 1,300 ரூபாய் விலை வைத்து வசூல் செய்தனர்.

ஆனால் விவசாயிகள் வீட்டிற்கு கொண்டு சென்று பார்த்த போது இயற்கை உரம் என விற்பனை செய்த மூட்டைகளில் வெறும் களிமண்ணே இருந்தது. இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி சுற்றுவட்டார விவசாயிகள் இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் தஞ்சாவூரைச் சேர்ந்த கும்பல் ஒன்றே அங்கிருந்து இந்த களிமண் மூட்டைகளைக் கொண்டுவந்து விற்பனை செய்தது தெரியவந்தது.

டிஏபி உரத்தட்டுப்பாட்டால்தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனிடையே இந்த மோசடி இயற்கை உரத்தை விநியோகித்த கும்பலை தஞ்சாவூர் வேளாண்மைத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருவதாக தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in