உங்கள் மகளை வளர்த்து தருகிறேன்: தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை மர்ம மரணம்

உங்கள் மகளை வளர்த்து தருகிறேன்: தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை மர்ம மரணம்

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் நான்கு வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவ்விவகாரத்தில் சிறுமியை தங்கள் பொறுப்பில் வைத்து வளர்த்துவந்த தம்பதியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(30) இவரது மனைவி கவுரி(25). இந்தத் தம்பதிக்கு சிவானி என்னும் நான்கு வயது மகள் இருந்தார். பிரகாஷ், கவுரி இருவருமே திருப்பூரில் உள்ள தனியார் மில் ஒன்றில் தொழிலாளியாக வேலைசெய்து வந்தனர். அதேமில்லில் அப்போது திண்டுக்கல் மாவட்டத்தின் செங்குளத்துப்பட்டியைச் சேர்ந்த கீர்த்திகா(32) என்பவரும் வேலை செய்தார்.

இவருக்கு நீண்டகாலமாக குழந்தை இல்லை. இதனால் பிரகாஷ், கவுரியிடம் அவர்களது குழந்தையை தன் பொறுப்பில் வைத்து வளர்த்துத் தருகிறேன். வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்குத்தான் செல்கிறேன் எனச் சொல்லியுள்ளார். இதனால் பிரகாஷ், கவுரி தம்பதியினரும் குழந்தையை நம்பி கீர்த்திகாவிடமும், அவரது கணவர் ராஜேஷ்குமாரிடமும் ஒப்படைத்தனர். குழந்தை சிவானி, கீர்த்திகாவிடமே வளர்ந்துவந்தது. இந்நிலையில் இன்று காலையில் குழந்தை சிவானிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் விரைந்து வருமாறும் கீர்த்திகா போனில் அழைத்து பிரகாஷையும், கவுரியையும் வரச் சொன்னார். அவர்கள் வந்து பார்த்தபோது குழந்தை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

இதனிடையே குழந்தை சிவானி உடம்பில் சூடு வைத்ததற்கான காயங்கள், ரத்தப்போக்கு ஆகியவை இருப்பதாகவும் முறையான விசாரணை தேவை எனவும் குழந்தையின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் வடமதுரை போலீஸார், குழந்தையை வளர்த்த தம்பதிகளிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in