‘300 கிலோமீட்டர் வேகத்தில் போ... பிரேக் அடிக்காதே’ - நால்வரைப் பலிகொண்ட கார் விபத்துக்குக் காரணமான ‘நண்பர்கள்’!

‘300 கிலோமீட்டர் வேகத்தில் போ... பிரேக் அடிக்காதே’ - நால்வரைப் பலிகொண்ட கார் விபத்துக்குக் காரணமான ‘நண்பர்கள்’!
மாதிரிப் படம்

230 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற கார் விபத்தில் சிக்கியதில், நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான காணொலிக் காட்சி தற்போது வெளியாகியிருக்கிறது. ஃபேஸ்புக் லைவாகப் பதிவுசெய்யப்பட்ட அந்தக் காட்சியில், இன்னும் அதிக வேகத்தில் செல்லுமாறு காரில் அமர்ந்திருந்தவர்கள் கூறுவது பதிவாகியிருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை (அக்.14) அதிகாலையில், மருத்துவப் பேராசிரியர் ஆனந்த் பிரகாஷ் உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூரிலிருந்து டெல்லியை நோக்கி பிஎம்டபிள்யூ காரை ஓட்டிச் சென்றார். 35 வயதாகும் அவர் ரோஹ்தாஸில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்துவந்தார். அவருடன் அவரது நண்பர்களான அகிலேஷ் சிங், தீபக் குமார், முகேஷ் ஆகியோர் அந்தக் காரில் இருந்தனர்.

உத்தர பிரதேசத்தின் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே சாலையில் அந்த கார் அதிவேகத்தில் சென்று, எதிரில் வந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது. கொடூரமான இந்த விபத்தில் அவர்கள் சென்ற கார் அப்பளமாக நொறுங்கியது. காரில் சென்ற நால்வரும் தூக்கிவீசப்பட்டு ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தனர். காரில் இருந்தவர்கள் ஃபேஸ்புக் லைவ் மூலம் நேரடியாகத் தங்கள் பயணத்தைப் பதிவுசெய்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், அந்தக் காணொலி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே கார் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தது. அதில் இருந்த ஒருவரைத் தவிர மற்றவர்கள் வேகத்தை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்று ஆனந்த் பிரகாஷை வற்புறுத்தியிருப்பது அந்தக் காணொலியில் தெரியவந்திருக்கிறது.

நண்பர்கள் வலியுறுத்தியதின் பேரில், 120 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டிக்கொண்டிருந்த ஆனந்த் பிரகாஷ், காரின் வேகத்தை அதிகப்படுத்துகிறார். ஒரு சில நொடிகளில் 230 கிலோமீட்டர் வேகத்தில் கார் பறக்கத் தொடங்குகிறது. அப்போது ஒருவர், “300 கிலோமீட்டர் வேகத்தில் போ” என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார். உடனே எல்லோரும் சீட் பெல்ட் அணிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளும் ஆனந்த் பிரகாஷ், சாலை காலியாக இருக்கும்போது கூடுதல் வேகத்தில் செல்லவிருப்பதாக நண்பர்களிடம் உறுதியளிக்கிறார்.

அருகில் அமர்ந்து ஃபேஸ்புக் லைவுக்காக செல்போன் கேமராவில் இந்தக் காட்சிகளைப் பதிவுசெய்துவந்த நண்பர் ஒருவர், 230 கிலோமீட்டர் வேகத்தில் கார் சென்றுகொண்டிருக்கும்போது, “பிரேக் அடிக்காதே!” என்கிறார். ஒரே ஒருவர் மட்டும் “ஜாக்கிரதையாக ஓட்டு” என்கிறார். இப்படி நண்பர்கள் தந்த ஊக்கத்தால் அதிவேகத்தில் சென்று விபத்தில் மாட்டி உயிரிழந்த ஆனந்த் பிரகாஷ், தனது நண்பர்களின் மரணத்துக்கும் காரணமாகிவிட்டார். ஒருகட்டத்தில், “நான்கு பேரும் இறந்துவிடுவோம்” என்று ஒருவர் கூறுகிறார். விளையாட்டாக அவர் சொன்னாலும், இறுதியில் அதுதான் நடந்திருக்கிறது.

நால்வருக்கும் சராசரியாக 30 வயதுதான் ஆகிறது. அவர்கள் மது அருந்தியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. எது எப்படியோ, இந்த விபத்து சாலையில் சாகசம் செய்ய விரும்புபவர்களுக்கு சரியான பாடம் என்கிறார்கள் இணையவாசிகள். நன்கு படித்து நல்ல நிலையில் இருந்த நால்வர் இப்படி ஆபத்தை உணராமல் நடந்துகொண்டு உயிரிழந்தது பெரும் துயரம்தான்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in