குஜராத் மாநிலத்தில் ஜாம் நகரில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்து நான்கு பேர் பலியான நிலையில் அவர்களது குடும்பத்துக்கு குஜராத் அரசு இழப்பீடு அறிவித்துள்ளது.
குஜராத்தின் ஜாம்நகர் சாதனா காலனி பகுதியில் குஜராத் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான மூன்று மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று அம்மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று முன் தினம் மாலையில் இடிந்து விழுந்தது. சுமார் பத்து பேர் கட்டிட இடிபாடுகளுக்கு உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில், உடனடியான நடைப்பெற்ற மீட்பு நடவடிக்கைகளின் விளைவாக ஐந்து பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் குரு கோவிந்த் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜாம்நகர் நகராட்சி ஆணையர் டிஎன் மோடி, உள்ளூர் எம்எல்ஏ திவ்யேஷ் அக்பரி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியை மேற்பார்வையிட்டனர். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா நான்கு லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.