தனுஷ்கோடி வந்திறங்கிய இலங்கைத் தமிழர்கள்: கடற்கரையிலேயே படுத்து உறங்கிய சோகம்

கடற்கரையில் தரை இறங்கிய போது
கடற்கரையில் தரை இறங்கிய போது

திரிகோணமலையிலிருந்து அகதிகளாக இன்று காலை தனுஷ்கோடி கடற்கரைக்கு பிளாஸ்டிக் படத்தின் மூலம் வந்து இறங்கிய நான்கு இலங்கைத் தமிழர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழ வழியின்றி பலரும் இந்தியாவிற்கு அகதிகளாக தொடர்ந்து வந்து கொண்டு உள்ளனர். குறிப்பாக, ராமேஸ்வரம் பகுதியில் இலங்கையிலிருந்து வரக்கூடிய அகதிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இலங்கை திரிகோணமலையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இன்று அதிகாலையில் பிளாஸ்டிக் படகு மூலம் தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கினர். வந்த களைப்பில் கடற்கரையிலேயே பெண்கள் படுத்து உறங்கினர். தொடர்ந்து, கடலோர காவல்துறையினரால் மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட நான்கு பேரிடமும் கடலோர காவல்துறையினர் மற்றும் மத்திய, மாநில உளவுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் நான்கு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரது மனைவி ஜெயமாலினி, அவரது மகன்கள் பதுர்சன், கம்சீசன் மற்றும் மகள் பதுசிகா என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த 2006 முதல் 2019-ம் ஆண்டு வரை மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி இருந்ததும், இலங்கையில் அமைதியான சூழல் திரும்பிய நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு மீண்டும் இலங்கைக்குச் சென்றுள்ளனர். தற்போது, மீண்டும் அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் தமிழகம் திரும்பிவிட்டதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவர்கள் நான்கு பேரும் பிளாஸ்டிக் படகில் தமிழகம் வருவதற்காக 4 லட்சம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

கூடுதல் விசாரணைக்கு பின்னர் அகதிகளில் முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்மூலம் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in